28/08/2026
கௌரவ விரிவுரையாளர்களுக்கு பெயரளவு ஊதிய உயர்வு போதாது!
*UGC வழிகாட்டுதலின்படி ஊதியம், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்துகிறது.*
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பல ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்கள், பணி பாதுகாப்பு, ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த திமுக ஆட்சிக் காலத்திலும், தற்போது தவெக ஆட்சிகாலத்திலும் அவர்களின் கோரிக்கைகள் தொடர்பான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கௌரவ விரிவுரையாளர்களின் நீண்டகால போராட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழக அரசு மாத ஊதியத்தில் ரூ.5,000 உயர்வு அறிவித்துள்ளது. இதன் மூலம் மாத ஊதியம் ரூ.30,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நீண்டகாலமாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு இந்த உயர்வு ஓரளவு நிவாரணம் அளிப்பதாக இருந்தாலும், அவர்களின் உழைப்பு, கல்வித்தகுதி மற்றும் அவர்கள் ஆற்றும் பணியின் தன்மையுடன் ஒப்பிடும்போது இந்த உயர்வு போதுமானதல்ல என்பதை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
அரசு கலைக் கல்லூரிகளில் நிரந்தரப் பேராசிரியர்களுக்கு இணையான கல்விப் பணிகளை கௌரவ விரிவுரையாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். பாடம் நடத்துவது மட்டுமின்றி, தேர்வுப் பணிகள், மாணவர் சேர்க்கை, மதிப்பீட்டுப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு கல்விசார் பணிகளிலும் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு தற்காலிக பணியாளர் என்ற நிலையிலேயே தொடர்ந்து குறைந்த ஊதியம் வழங்குவது சமூக நீதிக்கும், உயர்கல்வியின் தரத்திற்கும் எதிரானது.
பல்கலைக்கழக மானியக் குழுவான UGC, 2019ஆம் ஆண்டு வெளியிட்ட திருத்தப்பட்ட வழிகாட்டுதலில் கௌரவ விரிவுரையாளர்களுக்கான , மாதத்திற்கு அதிகபட்சம் ரூ.57,700 என்ற அளவில் நிர்ணயித்துள்ளது. மேலும், கௌரவ விரிவுரையாளர்கள் தகுதி மற்றும் தேர்வு நடைமுறைகளும் Assistant Professor பணிக்கான UGC விதிமுறைகளுடன் இணைந்ததாக இருக்க வேண்டும் என வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.
எனவே, வெறும் ரூ.5,000 ஊதிய உயர்வை வழங்கிவிட்டு கௌரவ விரிவுரையாளர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக தமிழ்நாடு அரசு கருதக்கூடாது. பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு UGC வழிகாட்டுதலின்படி உரிய ஊதியம் வழங்குவதுடன், அவர்களின் பணி பாதுகாப்பையும் அரசு உறுதி செய்ய வேண்டும்.
கௌரவ விரிவுரையாளர்களுக்கு UGC வழிகாட்டுதலின்படி உரிய ஊதியம் வழங்க வேண்டும். தற்போதைய ரூ.30,000 ஊதியத்தை உடனடியாக உயர்த்தி, UGC நிர்ணயித்துள்ள அளவிற்கு கொண்டு வர வேண்டும், பல ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். அத்தோடு அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.
கௌரவ விரிவுரையாளர்களின் பணிக்காலம், அனுபவம் மற்றும் கல்வித் தகுதிக்கு உரிய அங்கீகாரம் வழங்கி தேர்வுப் பணிகள், மாணவர் சேர்க்கை உள்ளிட்ட கூடுதல் பணிகளுக்கு உரிய ஊதியம் வழங்க வேண்டும்., தமிழக அரசு கௌரவ விரிவுரையாளர்களின் போராட்டங்களை மதித்து, பெயரளவிலான ஊதிய உயர்வைத் தாண்டி, UGC வழிகாட்டுதலின்படி உரிய ஊதியம் மற்றும் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு மாநில குழு வலியுறுத்துகிறது.
செல்வராஜ்
மாநிலத் தலைவர்
எஸ். கார்த்திக்
மாநிலச் செயலாளர்