28/08/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, நீர்வளங்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் – சட்டப்பேரவையில் மாண்புமிகு அமைச்சர் திரு. N. ஆனந்த் அவர்கள் விளக்கம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாட்டின் நீர்வளங்களை பாதுகாத்து, கடல்நீர் உட்புகுதலைத் தடுத்து, விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும், ஆறுகளை புனரமைத்து நீர்வளத்தை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து, வெள்ளாற்றில் ரூ.194 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை, நொய்யல் ஆற்றை புனரமைக்க ரூ.5 கோடி மதிப்பீட்டில் திட்டம் மற்றும் கொள்ளிடம் ஆற்றின் கடைமடையில் ரூ.773 கோடி மதிப்பீட்டில் Tail End Wall அமைக்கும் திட்டம் குறித்து விளக்கினார்.
வெள்ளாற்றில் ரூ.194 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை
மாண்புமிகு சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. தமிமுன் அன்சாரி அவர்கள், கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீத்தாம்பாளையம் கிராமத்தில் வெள்ளாற்றின் குறுக்கே கடல் நீர் உட்புகாமல் தடுக்க தடுப்பணை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
கடல் நீர் வெள்ளாற்றின் வழியாக சுமார் 25 கிலோமீட்டர் தூரத்திற்கு உட்புகுவதால், சிதம்பரம் மற்றும் புவனகிரி வட்டங்களில் உள்ள பல்வேறு கிராமங்களில் நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் உப்புநீராக மாறி, விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தீத்தாம்பாளையம் கிராமம் அருகே ஆதிவராகநல்லூர் பகுதியில் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திட்டத்திற்காக நில எடுப்புப் பணிக்கு ரூ.44.39 கோடி உட்பட மொத்தம் ரூ.194 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு, துறையின் பரிசீலனையில் உள்ளது என மாண்புமிகு அமைச்சர் தெரிவித்தார்.
நொய்யல் ஆற்றை புனரமைக்க ரூ.5 கோடி திட்டம்
மாண்புமிகு திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. S. பாலமுருகன் அவர்கள் நொய்யல் ஆற்றை மீட்டெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு பதிலளித்த மாண்புமிகு அமைச்சர் திரு. N. ஆனந்த் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நொய்யல் ஆற்றை புனரமைக்கும் பணிக்காக ரூ.5 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு தற்போது அரசின் பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், நொய்யல் ஆற்றில் தொழிற்சாலைக் கழிவுநீர் கலப்பதை கட்டுப்படுத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
கொள்ளிடம் ஆற்றின் கடைமடையில் ரூ.773 கோடி மதிப்பீட்டில் Tail End Wall
மாண்புமிகு சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. தமிமுன் அன்சாரி அவர்கள், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
பருவநிலை மாற்றத்தின் காரணமாக கடல் நீர்மட்டம் உயர்ந்து, கொள்ளிடம் ஆற்றின் முகத்துவாரம் வழியாக சுமார் 18 கிலோமீட்டர் தூரத்திற்கு கடல்நீர் உட்புகுவதால் சுற்றியுள்ள கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தடுக்கும் வகையில், கடலூர் மாவட்டம் திருக்கழிப்பாலை கிராமத்திற்கும், மயிலாடுதுறை மாவட்டம் அளக்குடி கிராமத்திற்கும் இடையே கொள்ளிடம் ஆற்றின் கடைமடை பகுதியில் Tail End Wall அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் சிதம்பரம் மற்றும் சீர்காழி சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்கள் பயன்பெறுவதுடன், நிலத்தடி நீர் செறிவூட்டல் மூலம் சுமார் 13,220 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இத்திட்டத்திற்காக ரூ.773 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது துறை மேற்கொண்ட மாதிரி ஆய்வுகளின் முடிவுகளின் அடிப்படையில் திருத்தப்பட்ட விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருகிறது. திருத்தப்பட்ட திட்ட மதிப்பீடு பெறப்பட்டவுடன் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு அமைச்சர் திரு. N. ஆனந்த் அவர்கள் தெரிவித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாட்டின் நீர்வளங்களை பாதுகாத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, எதிர்கால தலைமுறைகளுக்கான நீர்வளப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நீர்வளத்துறை தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.