05/08/2026
இந்து மத, ஜாதிய, ஆணாதிக்கச் சமுதாயத்திற்கு எதிரான ஜாதியற்றோர் ஓர் சமுதாயமாக இணைய வேண்டும்.
நமது அன்றாட வாழ்வில், இயல்பான செயல்களில், பண்பாட்டில் ஜாதியையும், ஆணாதிக்கத்தையும் நிரப்பி வைத்துக் கொண்டு, எங்கோ ஒரு ஊரில் தீண்டாமைக் கொடுமை நடப்பதாக அறிந்து அவற்றுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டிருப்பதைவிட,
ஜாதி, ஆணாதிக்க ஒழிப்பு என்பவைகளை நமது மூளையிலிருந்து தொடங்க வேண்டும். நமது வீடுகளிலிருந்து தொடங்க வேண்டும். திருமணம், குடும்பம், சொந்தபந்தங்கள், பழக்க வழக்கங்கள் என்பவைகளில் நிறைந்திருக்கும் இந்து மதப் பொதுப்புத்தியை ஒழிப்பதை முதன்மைக் கடமையாக ஏற்க வேண்டும்.
என்ற நோக்கத்தில் திராவிடர் தளம் #திராவிடர்_வாழ்வியல்_விழா-க்களை நடத்தி வருகிறது. கடந்த 16.11.2025-இல் கோவையில் நடத்தினோம். கடந்த ஞாயிறு 02.08.2026-இல் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடத்தியிருக்கிறோம்.
திராவிடர் தளம், பெரியார் மய்யம், திராவிடர் முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் ஒருங்கிணைத்த இவ்விழாவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேற்கு மாவட்ட அவைத் தலைவர் தோழர் தி.மோகன் அவர்கள் தலைமையேற்று, அனைத்து முன் ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து விழாவின் அச்சாணியாக நின்றார்.
திராவிடர் கழகத்தின் மாவட்டத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் தோழர் பி.ஆனந்தன், கடந்த 15 நாட்களாக நிகழ்வு சிறப்பாக நடைபெறத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார்.
திராவிடர் தளம் தோழர்கள் பல்லடம் நாராயணமூர்த்தி, வடிவேல், மணிகண்டன், தாமரை, சந்திரன், கார்த்தி, அவிநாசி செந்தில்குமார், பெதப்பம்பட்டி குணசேகரன், SFD தோழர்கள் விமல், கோகுல், சரண், சூர்யா, ஹரி, இரஞ்சித், யாழ்மொழி, ஜி.கல்லுப்பட்டி ஜெயப்பாண்டி
பெருந்துறை மூர்த்தி, பரிமளா, அவிநாசி திவ்யா, இராஜ்குமார் ஆகியோர் முழுமையாகப் பரப்புரையில் ஈடுபட்டனர்.
திராவிடர் முன்னணி தோழர்கள் மருதமூர்த்தி, இராஜா, மார்க்சிம் கார்க்கி ஆகியோர் விழாவுக்கான ஃப்ளெக்ஸ், செல்ஃபி ஸ்டேண்ட், அரங்க அமைப்புப் பணிகள் முழுவதையம் சிறப்பாகச் செய்திருந்தனர்.
தோழர்கள் இளையகுமார், சரண், யாழினி, சூர்யா ஆகியோர் இணையதளங்களில் விழாவுக்கான விளம்பரங்களைத் தொடர்ச்சியாகத் தயாரித்து வெளியிட்டு வந்தனர்.
விழாவின் தொடக்கத்தில் கடவுள் மறுப்பு உறுதிமொழியையும், ஜாதி மறுப்பு உறுதிமொழியையும் தோழர்கள் அனைவரும் ஏற்றனர். மரணசாசனம் அறிவிப்பு அச்சிட்டு வெளியிடப்பட்டது.
அடிமைப்படுத்தும் குலதெய்வங்கள் என்ற கள ஆய்வு நூல் 3-ஆம் பதிப்பாக வெளியிடப்பட்டது. பெரியார் மய்யத் தோழர் பழனி அருண் அவர்கள் நூலை வெளியிட, ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் ஒட்டன்சத்திரம் க.சிவா அவர்கள் பெற்றுக் கொண்டார்.
தலித் முரசு - காட்டாறு இணைந்து "நான் இந்துவாக இறக்கப் போவதில்லை" என்ற தலைப்பில், இந்து மதத்திலிருந்து வெளியேறுவதற்கும், மதமாற்றத்திற்கும் வழிகாட்டும் பெரியாரின் உரைகளைத் தொகுத்து வெளியிட்டது.
அந்நூலின் 2-ஆம் பதிப்பை, திண்டுக்கல் மாவட்ட மேனாள் அரசு சிறப்பு வழக்கறிஞர் தோழர் க.ஜெயராஜ் அவர்கள் வெளியிட, திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தோழர் பொள்ளாச்சி கா.சு.நாகராசு அவர்களும், மேனாள் தமிழ்த்துறைப் பேராசிரியர் ஒட்டன்சத்திரம் தோழர் மதியழகன் அவர்களும் பெற்றுக் கொண்டனர்.
பெரியார் மய்யத் தோழர் பழனி ஜவகர், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் திண்டுக்கல் தோழர் தடா மதி, திராவிடர் முன்னணி பழனி தோழர் சரண், திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாநிலச் செயற்குழு உறுப்பினர் தோழர் ஞானசேகர், பெரியாரிய உணர்வாளர் ஒட்டன்சத்திரம் சு.கருப்புச்சாமி, திராவிடர் கழகத்தோழர் தேவத்தூர் ஆசிரியர் மதிவாணன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் மதுரைத் தோழர் முருகேசன், திராவிட விழுதுகள் ஒருங்கிணைப்பாளர் ஒட்டன்சத்திரம் தோழர் அரிஸ்டாட்டில், அவிநாசி ஆசிரியர் கலைச்செல்வன், மதுரை சமூகச் செயல்பாட்டாளர் தோழர் நல்லூரான் ஆகியோர் உரையாற்றினர். ம.தி.மு.க. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் ஒடவை ந.தமிழ்வேந்தன், சத்திரப்பட்டி பழனிச்சாமி ஆகியோர் தங்களது முழுமையான ஆதரவை வழங்கினர்.
நண்பகலில் தாராபுரம் வழக்கறிஞர் தோழர் கிருட்டிணக்குமார் அவர்களின் ஏற்பாட்டில் சுவையான மாட்டுக்கறி விருந்து நடைபெற்றது.
விருந்திற்குப் பிறகு தோழர் பெரியாரின் வாழ்வியலை, திராவிடர் பண்பாட்டைத் தங்களது அன்றாட வாழ்வில் பின்பற்றும் தோழர்களின் அனுபவப் பகிர்வு சிறப்பாக நடைபெற்றது. 18 வயது முதல் 70 வயது வரை உள்ள தோழர்கள் தங்களது வாழ்வில் பெரியாரின் பண்பாட்டைப் பின்பற்றியதால் பெற்ற சுதந்திர வாழ்க்கையைப் பற்றி விளக்கமாகப் பேசினர். விழாவிற்குப் புதிதாக வந்திருந்தவர்களுக்கு திராவிடர் வாழ்வியல் பற்றிய ஒரு அறிமுகமாகப் பிற்பகல் நிகழ்வு அமைந்தது.
விழாவிற்கு கடந்த ஜூலை 15 முதல் ஒட்டன்சத்திரத்தில் கடை கடையாக, வீதி வீதியாக, கிராமம் கிராமமாகப் பரப்புரைகளை நடத்தினோம். நன்கொடை திரட்டினோம். கிராமங்களில் புதிய இளைஞர்களையும், பெண்களையும், மாணவர்களையும் சந்தித்து துண்டறிக்கைகளையும் எமது கோரிக்கைகளையும் விளக்கி சிறு சிறு கூட்டங்களை நடத்தினோம்.
அந்த நிலையில் இந்து முன்னணியினர் விழாவைத் தடை செய்ய வேண்டும் என்று காவல் துறை வழியாக மிரட்டல் விடுத்தனர். நமது விழா நடக்கும் அதே இடத்தில் "சனாதனப் பண்பாட்டு விழாவை நடத்துவோம்" என மிரட்டினர். தாராபுரம், வத்தலக்குண்டு நகரங்களில் பரப்புரைகளுக்குச் சென்ற தோழர்களை மிரட்டினர். காவல்துறையும் தொடக்கத்தில் சில நெருக்கடிகளைக் கொடுத்தது. அவற்றை நாம் சட்டரீதியாகச் சந்திக்கத் தயாரானோம்.
ஆனால், அந்தப் பகுதி முழுவதும் நமது விழாவுக்கு இருந்த வரவேற்பையும், ஒட்டன்சத்திரத்திலுள்ள திராவிடர் இயக்க உணர்வாளர்களின் ஆதரவையும், நமது பக்க நியாயத்தைப் புரிந்துகொண்ட காவல்துறை இந்து முன்னணிக்குத் தடை விதித்து, நமது திராவிடர் வாழ்வியல் விழாவுக்கு முழுமையான பாதுகாப்பைக் கொடுத்தது.
எம்மைப் பொறுத்தவரை திராவிடர் வாழ்வியல் விழா என்பது ஒட்டன்சத்திரத்தில் ஒரு தொடக்கம். இனி திண்டுக்கல் மாவட்டத்திலும் திராவிடர் தளம் முழுமையாக இயங்கத் தொடங்கும். அதற்கான உந்துதலை உருவாக்கிய இந்து முன்னணிக்கு எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.