28/07/2026
தமிழ்த்தாய் வாழ்த்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில், அதனை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரிலான பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்தைப் பின்னுக்குத் தள்ளி, வந்தே மாதரத்திற்கு முதலிடம் அளித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்மொழியையும், மாநிலத்தின் நீண்டகாலப் பண்பாட்டு மரபையும் திட்டமிட்டுச் சிறுமைப்படுத்தும் இச்செயல் தமிழ் நெஞ்சங்களை அடியோடு காயப்படுத்தியுள்ளது.
ஒன்றிய பாஜக அரசின் இந்தி-சமஸ்கிருத திணிப்புக் கொள்கைகளுக்குச் சாதகமாக, மாநில அரசின் நிதியில் செயல்படும் ஒரு பல்கலைக்கழகமே நமது மாநில அடையாளத்தைப் புறக்கணிப்பது அப்பட்டமான துரோகமாகும். தமிழ்நாட்டின் மொழி உரிமைக்கும், இறையாண்மைக்கும் எதிரான இதுபோன்ற போக்கைக் கடந்து செல்ல முடியாது.
மாநிலத்தின் பண்பாட்டுப் பாரம்பரியத்தையும், அரசின் அதிகாரப்பூர்வ நடைமுறைகளையும் அலட்சியப்படுத்திய பல்கலைக்கழக அதிகாரிகளின் இந்நடவடிக்கையில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழ்நாட்டின் மரபை மீறும் இத்தகையச் செயல்கள் இனி ஒருபோதும் நிகழாத வண்ணம், எதிர்காலத்திற்கு எச்சரிக்கையாக அமையும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
-M.நிஜாம் முகைதீன்,
பொதுச் செயலாளர்,
SDPI கட்சி தமிழ்நாடு.