Brezhnev subramaniam

Brezhnev subramaniam Brezhnev

18/11/2025

18/11/2023 இல் வால்பாறையில் இருந்து மலையக மக்களும்
தொழிலாளர் வாழ்வும்

வால்பாறையின் இயற்கை எழிலும் இதமான காலநிலையும் சுற்றுலாப் பயணிகளை வசீகரித்துவருகின்றன.

ஆழியார் அணை, நாற்பது கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட உயர்ந்த மலைப் பாதை, நீர்வீழ்ச்சிகள், வரையாடுகள், யானைகள் முதலான விலங்குகள், அடர்ந்த காடுகள் முதலானவை சுற்றுலாச் செல்வோரிடையே குதூகலத்தை ஏற்படுத்துகின்றன.

அவர்களது மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை மலர்ச்சி நிறைந்த முகங்கள் காட்டிநிற்கின்றன. ஆனால், அந்நிலங்களில் இங்கெவர் வாழவோ உழைத்து தேயும் மக்களின் முகங்களில் மலர்ச்சி இல்லை. வாழ்வில் செழிப்பு இல்லை.

தற்காலிகமாக வந்து செல்பவர்களுக்கு வசந்தங்களை வாரி வழங்கும் வால்பாறை, அந்நிலத்தின் உயிர்ப்புடன் கலந்துள்ள மக்களுக்கு மட்டும் வசந்தங்களை வெகுதொலைவில் மறைத்து வைத்துள்ளது போலும்…

அங்குள்ள தோட்டங்களில் வேலை செய்யும் மக்கள் தோட்டக் கம்பனிகளின் அதீத சுரண்டல், காட்டு விலங்குகளின் தாக்குதல், சமூக நலச் செயற்பாடுகளின் போதாமைகள், வாழ்க்கைதர வசதிகளின்மை, தமது நலனில் அக்கறைகொண்ட வலுவான அமைப்பின்மை முதலானவற்றால் வாழ்தலுக்காகப் போராடிவருகிறார்கள்.

தோட்டக் கம்பனிகளின் நிர்வாகச் செயன்முறை ஒரு பக்கமும் காட்டு யானைகளும் சிறுத்தைகளும் இன்னொரு பக்கமும் அம்மக்களின் வாழ்வைப் பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளாக்கிவர, தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் ஏனைய பக்கங்களில் அவர்களை அலைக்கழித்து வருகின்றன.

தனியார் கம்பனிகளின் தோட்டங்களானபடியால் வேலை செய்யும் குடும்பத்தவர்க்கே வீடுகள் வழங்கப்படுகின்றன. அதனால் வீடுகள் பராமரிப்பற்று மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றன.

முற்றிலும் பலகையாலான லயங்களும் தகரங்களாலான லயங்களும் இன்றும் உள்ளன. அறையும் சமையலறையும் தகரங்களைக் கொண்டு பெரிதும் மறைக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான லயங்களின் கூரைகளில் புல் மண்டியுள்ளது. கழிவறை வசதிகள் மிகமிக மோசமாக உள்ளன. சிறார் பராமரிப்பு நிலையங்களும் பாடசாலைகளும் வசதிகள் அற்றவையாகவே உள்ளன.

வயது முதிர்ந்த காலத்திலும் வீட்டைத் தக்க வைப்பதற்காகத் தொடர்ந்து பணிக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் பலர் உள்ளனர்.

இளமையில் இருந்து முதுமை வரையான காலத்தில் அம்மகளின் உழைப்பை உறிஞ்சும் தோட்ட உடைமையாளர்கள், தொழில்செய்ய முடியாத காலத்தில் அம்மக்களின் இருப்பிடங்களையும் பறித்துக்கொண்டு அந்தரத்தில் கைவிடுகின்றனர்.

இலங்கையின் மலைநாட்டு வாழ்வைவிட வால்பாறை வாழ்வு பின்தங்கியதாகவே தெரிகிறது.

மாதாந்த வருமானம் இலங்கையில் தோட்டத் தொழிலாளருக்குப் போல மிகக் குறைவாகவே கிடைக்கிறது.

நான் சந்தித்தவர்களுள் பெரும்பாலானவர்கள் வட்டிக்குக் காசு வாங்கியே வாழ்வைக் கடத்துகின்றனர்.

இலங்கையில் போலவே பல தொழிற்சங்கங்கள், ஒவ்வொரு கட்சிக்குமான தொழிற்சங்கள் எனத் தொழிற்சங்கங்கள் மலிந்து கிடக்கின்றன. ஆனால், தொழிலாளர் வாழ்க்கைதர மேம்பாட்டில் அவை அக்கறை காட்டிவருவதாகத் தெரியவில்லை.
கம்யூனிஸ்ட் கட்சி மாத்திரம் ஓரளவு குரல் கொடுப்பதாக CSI போதகர் ஒருவர் குறிப்பிட்டர்

தேயிலைத் தோட்டங்களில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து வால்பாறையில் வந்து குடியேறியவர்கள், சிறீமா – சாஸ்திரி ஒப்பந்தத்தினால் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள், இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என மூவகையினர் தொழில் புரிகின்றனர்.

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்தவர்கள் தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்ட காலத்திலும் அதற்குப் பின்பான காலத்திலும் தொழில் நிமித்தம் குடியேறியுள்ளனர்.

இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுள் அநேகமானோர் முதலில் தமது பூர்வீக இடங்களுக்குச் சென்று வாழ முனைந்துள்ளனர். ஆனால், காலநிலை, புதிய விவசாயமுறை, உறவினர்களிடையேயான விரிசல் முதலானவற்றால் அங்கு தொடர்ந்து வாழமுடியாத நிலையில் வால்பாறைக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

வால்பாறையின் தேயிலைத் தோட்டங்களும் காலநிலையும் அவர்களை ஈர்த்துள்ளன.

இலங்கையிலிருந்து சென்று அரைநூற்றாண்டுக்கு மேலாகிய பின்னரும், அரசு அவர்களை முழு இந்தியப் பிரஜையாக ஏற்றுக்கொண்ட பின்னரும் இன்னும் முழுமையான இந்தியர் என்ற அடையாளத்துக்குள் உள்ளடங்காத மக்கள் போன்றே வாழ்கின்றனர். சிலோன்காரர், கண்டிக்காரர் என்பதே அவர்களின் அடையாளமாக விளங்குகிறது.

இங்கிருந்து சென்றவர்கள் மட்டுமல்ல அவர்களது சந்ததியினரும் சிலோன்காரர் – கண்டிக்காரர் என்றே அடையாளப்படுத்தப் படுகின்றனர். அவர்கள் அதிகளவில் குடியேறியிருக்கும் பகுதிகளும் சிலோன்காரர் பகுதிகளாகவே – சிலோன் காலனி - சுட்டப்படுகின்றன.

இலங்கையில் இந்தியத் தமிழனாக வாழ்ந்தவர்கள் இந்தியாவுக்குச் சென்றதும் – தாயகம் திரும்பியதும் - சிலோன்காரராக வாழ்கின்றனர்.

இந்த இடைவெளி – அடையாளச் சிக்கல் - தாங்கள் வாழும் நாட்டில் அவர்களுக்கு ஓர் அந்நியத் தன்மையை ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் இரு நாடுகளின் சமூகமும் அரசும் அவர்களைப் பெரிதும் இரண்டாம் நிலையில் வைத்து அணுகுவதற்கு அதுவும் காரணமாக விளங்குகிறது.

இன்றைய நிலையில் வால்பாறையின் தோட்டங்களில் பிற மாநிலத்தவரே அதிகமாகத் தொழில்புரிகின்றனர்.

பெரிதும் அசாம், ஜார்க்கண்ட் மாநிலத்தவர்களே ஒப்பந்த அடிப்படையில் வந்து வேலை செய்கின்றனர்.

அம்மாநிலங்களில் தொழிலாளர்களைத் திரட்டுவதற்கான முகவர்களைத் – மேஸ்திரி - தோட்டக் கம்பனிகள் வைத்துள்ளன.

எவ்வாறு காலனியக் காலத்தில் கங்காணிகள் போலி ஆசைகளைக் காட்டி உலகின் பல பாகங்களுக்கும் தென்னிந்திய மக்களைக் கூலித் தொழிலாளர்களாக அழைத்துச் சென்றார்களோ அதனைப் போலவே கங்காணிகளை ஒத்த முகவர்கள் அசாம், ஜார்க்கண்ட் மாநிலங்களிலிருந்து தொழிலாளர்களைத் திரட்டி வருகின்றனர்.

அவ்வாறு குடியேறியவர்கள் தோட்ட மக்களுடன் லயங்களில் வாழ்கின்றனர். பலரும் குடும்பமாக வந்துள்ளனர்.

நான் உரையாடிய ஜார்க்கண்ட் மாநிலத்தவர்களுள் ஒரு பெண் கங்காணி யாக இருந்தார்.

ஜார்க்கண்ட் மற்றும் அசாமில் நிலவும் வேலையின்மை, குறைந்த நாட்சம்பளம் ஆகியனவும் தொழிலாளர்களைத் திரட்டும் முகவர்களின் வார்த்தைகளும் அவர்களை வால்பாறையை நோக்கி ஈர்த்துள்ளன.

தோட்டங்களில் உள்ள தமிழர்களுக்கும் பிற மாநிலத்தவர்களுக்கும் நெருக்கமான உறவு இருப்பதாகத் தெரியவில்லை. பிற மாநிலத்தவரின் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட ஓய்வற்ற உழைப்பு இங்குள்ள தமிழர்களிடத்தில் வெறுப்பை வளர்த்து வருவதை அவதானிக்க முடிந்தது.

தோட்டமொன்றில் வேலை செய்யும் தமிழரொருவர் (சிலோன்காரர் என அடையாளப்படுத்தப்படுபவர்) பிற மாநிலத்தவர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் தோட்டக் கம்பனிகளும் அவர்களின் வருகையை விரும்புவதாகவும் எதிர்காலத்தில் வால்பாறையின் தேயிலைத் தோட்டங்களில் உத்திரபிரதேசத்த வர்கள் மட்டுமே வேலை பார்க்கக்கூடிய சூழல் தோன்றும் என்றும் கூறினார்.

வால்பாறை மற்றும் ஊட்டி, நீலகிரி மனிதர்களுள் நெஞ்சிக்கு மிகவும் நெருக்கமாவர்களாக அசாம், ஜார்க்கண்ட், நேபாள் தொழிலாளர்களை உணர்ந்தேன்.

என் மூதாதையர்களின் சமகாலப் பிம்பங்களாக அவர்கள் உருப்பெற்று – உயிர்ப்பெற்று நடமாடினார்கள்.

காலனியக் காலத்தில் வறுமை நிறைந்த வாழ்விலிருந்து விடுபடுவதற்காகக் கங்காணிகளின் ஆசை வார்த்தைகளில்,மாசியும் தேங்காயும் இலவசம் போன்ற வார்த்தையில் சிக்குண்டு குடும்பங்களைவிட்டும்,குடும்பத்துடன் இலங்கைவந்து சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து அதீத சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளான எம்மூதாதையர் போல சுதந்திர இந்தியாவில் அம்மக்கள் துயருருகிறார்கள் – உழைத்து தேய்கிறார்கள்.

தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து வால்பாறையில் குடியேறி தேயிலைத் தோட்டங்களில் தொழில் செய்பவர்கள், இலங்கையிலிருந்து தாயகம் திரும்பி வால்பாறையில் வேலை செய்பவர்கள், பிற மாநிலங்களில் இருந்து வந்து வேலை செய்பவர்கள் என எல்லோருமே பெரும் சுரண்டலுக்கும் உரிமை மறுப்புகளுக்கும் உள்ளாகி வருகின்றனர். அவர்களின் வாழ்க்கைதரம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.

இம்மக்களின் நல்வாழ்வில் தமிழ்நாட்டு அரசோ இந்திய அரசோ அக்கறைகாட்டுவதாகத் தெரியவில்லை.

தொழிற்சங்கங்களும் மலையகத்தின் தொழிற்சங்கங்கள்போல தொழிலாளர்களைச் சுரண்டிக்கொழுப்பதிலேயே ஆர்வம் காட்டிவருகின்றன.

அங்குள்ள மக்கள் வாழ்வின் ஒவ்வாரு அசைவும் இலங்கை மலையகத்தின் கடந்த காலத்தினதும் நிகழ்காலத்தினதும் வாழ்வை நினைவுபடுத்துவனவாக அமைந்துள்ளன.

ஏனைய இந்தியத் தொழிலாளர்களைவிட இலங்கையிலிருந்து இந்தியனாக உள்வாங்கப்பட்டவர்களுக்குத் தனியான சவால்களும் உள்ளன. அரசு அவர்களுக்கு இந்தியப் பிரஜை அந்தஸ்தை வழங்கினாலும் இன்னும் அவர்கள் முழு இந்தியப் பிரஜையாகவில்லை. சிலோன்காரர் என்ற அடையாளத்துடன் முழு இந்தியனாக அங்கிகரிக்கப்படாமல் அந்நியப்பட்டு வாழ்கின்றனர்.

இலங்கையில் இந்தியர் அடையாளத்தை வலியுறுத்துபவர்கள் வால்பாறை தொழிலாளர்களின் நிலையைக் கவனத்தில் கொள்ளவேண்டியது தற்காலச் சூழலில் மிகவும் அவசியமானது என்று நினைக்கிறேன்.

இலங்கையிலிருந்து இந்தியாவுக்குச் சென்று அரைநூற்றாண்டு கடந்த பின்பும் – சட்ட ஆவண அடிப்படையில் இந்தியர்களாக வாழ்கின்ற போதும் – இன்னும் சிலோன்காரர் – கண்டிக்காரர் என இரண்டாம்நிலை அடையாளத்துடனே தாயகம் திரும்பியோர் வாழ்கிறார்கள்.

மிகப் பெரிய உரிமை மறுப்பும் சுரண்டலும் தனது பிரஜைகளுக்கு நிகழ்ந்து வருவதை – காலனியக் காலத்துத் துயர் தற்போதும் தொடர்வதை – இந்திய அரசு கண்டுகொள்ளவில்லை; அம்மக்களின் நலனின் அக்கறைகாட்டவில்லை.

சந்திப்பை ஏற்பாடு செய்து கொடுத்து பெரிதும் உதவி புரிந்த. CSIதஞ்சாவூர் பேராயருக்கும், கோயம்புத்தூர் பேராயர் அவர்களுக்கும், தோழமையோடும் வாஞ்சையோடும் உதவி புரிந்த CSI
முகாமையாளர் அரசகுமார் அவர்களுக்கும் சிறம்தாழ்ந்த நன்றிகள்.

இந்திய சுற்றுலாவை ஒருங்கிணைத்து ஒரு குறையும் இல்லாமல் எங்களை வழிநடத்தி அழைத்து சென்ற எமது தேசிய முகா மையாளர் திரு. ரால்ஸ்டன் வெயின்ம ன்
அவர்களுக்கும் தோழமைக்கலந்த நன்றிகள்.

பிரஷ்நேவ் சுப்பிரமணியம்

01/02/2025
31/12/2024

Address

Hatton

Website

Alerts

Be the first to know and let us send you an email when Brezhnev subramaniam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share