17/02/2023
சில நாட்களுக்கு முன்பு அலுவலகத்துக்கு வந்த இருவர் சுமார் 30 வருடம் பழமையான அவருடைய பெயரிலல்லாத ஆவணம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு எமது அலுவலகத்தால் வழங்கப்படுகின்ற சான்றிதழ் ஒன்றை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
எமது அலுவலர்கள் குறித்த ஆவணம் ஆறு மாதங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்ற அலுவலக நடைமுறையை அவர்களுக்கு தெரிவித்த போதும் அதனை ஏற்றுக் கொள்ளாமல் என்னிடம் வந்து சான்றிதழ் ஏன் எனக்கு வழங்க முடியாது இன்ன இன்ன ஆவணங்களில் இது குறிப்பிடப்பட்டுள்ளது என கூறினார்.
நான் அவர்கள் இருவருக்கும் தெளிவாக ஏன் இவ்வாறான ஒரு நடைமுறை எமது அலுவலகத்தால் பின்பற்றப்படுகின்றது என்பதையும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் விளங்கப்படுத்தியதுடன் குறித்த ஆவணங்களை ஒழுங்குப்படுத்தி வழங்கும் பட்சத்தில் உடனடியாக சான்றிதழை வழங்க முடியும் என குறிப்பிட்டு இருந்தேன்.
எனினும் சமூகமளித்திருந்த இருவரில் வயதில் மூத்தவரான ஒருவர் மிகவும் கடுமையான தொணியில் நீங்கள் மக்கள் பணியாற்றுவதற்காகவே இவ்விடத்தில் இருக்கின்றீர்கள் நீங்கள் இவ்வாறு கூற முடியாது என்று கூறியது மாத்திரமின்றி மிக மோசமான வார்த்தைகளையும் பயன்படுத்த தொடங்கினார்.
நிலைமை எல்லை மீறியதைத் தொடர்ந்து நானும் வேறு வழியின்றி அவர்களை அலுவலகத்தை விட்டு வெளியேறுமாறு சொல்ல வேண்டியதாய்ப் போய்ட்டு.
இதுவரை காலமும் என்னிடம் வருபவர்கள் ஏதோ ஒரு வகையில் தெளிவை பெற்றவர்களாகவே செல்கின்ற சந்தர்ப்பங்களை கண்டிருக்கின்றேன்.
எனினும் அன்றைய விடயத்தை நான் அத்தோடு மறந்துவிட்டிருந்தேன்.
----------+-----------+-----------+------------+---------------
இன்று மீண்டும் அச் சான்றிதழை பெறுவதற்காக அன்று வந்த இருவரில் வயதில் இளையவரானவர் உரிய ஆவணங்களோடு வந்திருந்தார்.
உரிய சான்றிதழை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கைகளை எமது அலுவலர்களும் மேற்கொண்டிருந்தனர்.
அந்த ஆவணங்களுக்கு கையெழுத்திடும் போதுதான் முதல் தடவையாக அவர்கள் கொண்டு வந்திருந்த ஆவணத்திற்கும் தற்போது கொண்டு வந்த ஆவணத்திற்கும் வேறுபாடுகளை அவதானித்தேன்.
பழைய ஆவணத்தில் காணப்பட்ட காணியின் பரப்பை விட தற்போதைய புதிய ஆவணத்தில் குறைவான பரப்பிலான காணி காட்டப்பட்டிருந்ததை அவதானித்து பின்னர் வந்தவரிடம் இதைத்தான் நான் அன்று சொல்லி இருந்தேன் என்று கூறி ஆவணங்களை வழங்கச் சொல்லி இருந்தேன்.
இது ஒரு சிறிய விடயமாக இருப்பினும் சேவைக்காக வருகின்ற பொதுமக்கள் தமது பக்கத்தில் உள்ள பிழைகள் அனைத்தையும் கடமையில் இருக்கின்ற அரச அதிகாரிகள் மூடி மறைத்து தமக்கான சேவைகளை வழங்க வேண்டும் என கூறுகின்றனர்.
அவ்வாறு பொதுமக்களின் பிழைகளினால்/தவறுகளினால் வழங்கப்பட முடியாத சேவைகளை, அரச அதிகாரிகளின் பிழைகளாகவும் தாமதங்களாகவும் சுட்டிக்காட்டி விமர்சிக்கின்றனர்.
அரச சேவை வினைத்திறன் மிக்கதா என்பது தொடர்பில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் காணப்பட முடியும். ஆனால் அதற்காக தான் செய்யும் பிழைகளை/தவறுகளை எல்லாம் கண்டு கொள்ளாமல் அரச அலுவலர்கள் தமக்கான சேவைகளை வழங்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்ற நிலைமைதான் எங்கோ ஓரிடத்தில் இலஞ்சம் போன்ற முறைகேடான விடயங்கள் தோற்றம் பெறவும் காரணமாக அமைகின்றன என்பது நிதர்சனமான உண்மையாகும்.