09/08/2026
இறந்தவர் ஒருவரின் உடலை ஊருக்கு அனுப்புவது என்றால் "அது என்ன பெரிய விசயமா?" என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அதற்குப் பின்னால் இருக்கும் போராட்டங்கள் என்னென்ன என்பதை எல்லோரும் உணர்வதில்லை. எத்தனையோ சிக்கல்கள் நிறைந்த பல சவால் நிறைந்த சம்பவங்களைப் போல இன்னொரு சிக்கலைச் சந்திக்க நேர்ந்ததைத்தான் உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன். சீனிவாஸ். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயது இளைஞர். அல்கூஸ் பகுதியில் உள்ள ஒரு லேபர் கேம்ப் அருகே, மதுபோதையில் கீழே விழுந்து உயிரிழந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. துபாய் போலீசார் உடலை எடுத்துச் சென்று, ஆரம்பத்தில் அடையாளம் தெரியாத உடல் (Unclaimed / Unknown Body) என்ற வகையில் வைத்திருந்தனர். இறந்தவருடைய அடையாளத்தைக் கண்டுபிடிக்க உதவுமாறு 'ஹோப்' குழுவினரிடம் தெரிவித்ததால் நாங்கள் அந்தப் பணியில் ஈடுபட்டோம். Fingerprint மூலம் கிடைத்த தகவல்கள், பாஸ்போர்ட் நகல் உள்ளிட்ட விவரங்களை வைத்து, இந்தியாவில் உள்ள அவரது குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ளும் முயற்சியைத் தொடங்கினோம். இந்தப் பணியில் எங்கள் HOPE குழுமத்தில் பயணிக்கும் அன்வர், நமக்கு மிகுந்த உதவியாக இருந்தார். குடும்பத்தினரை அணுகுவதற்கும், தேவையான தகவல்களைப் பெறுவதற்கும் அவர் தொடர்ந்து உதவி செய்தார். அதுமட்டுமல்லாமல், Immigration மூலம் சீனிவாஸ் எந்த நிறுவனத்தில் பணிபுரிந்தார் என்பதையும் கண்டுபிடித்து கொடுத்தார் அந்த நிறுவனத்தின் உரிமையாளரைத் தொடர்பு கொண்டோம். அவர்களுடன் பேசி, உடலை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளையும் தொடங்கினோம். இது நாங்கள் 'ஹோப்' மூலமாக வழக்கமாகத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் ஒரு பணிதான். சில நேரங்களில் மாதத்திற்கு 8–10 உடல்கள், வேறு சில மாதங்களில் 12–15 உடல்கள் என்று இறந்தவர்களின் உடல்களை இந்தியாவிற்கு சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணியில் உதவி வருகிறோம். ஆனாலும், இப்படி அனுப்பப்படுகின்றவர்களைக் குறித்து எல்லாவற்றையும் நான் Facebook-இல் எழுதுவதில்லை. அப்படி எல்லாவற்றையும் எழுதிக்கொண்டிருந்தால், என்னுடைய Facebook பக்கமே ஒரு “மயானச் செய்திப் பக்கமாக”வே மாறிவிடும். அதனால், ஒவ்வொரு முறையும் நாங்கள் சந்திக்கும் சில சவாலான சம்பவங்களை மட்டுமே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். புகழுக்காகவோ அல்லது தற்பெருமைக்காகவோ அல்ல. இந்தப் பணியில் ஈடுபடுகையில் ஏற்படும் பல்வேறு விதமான கலவையான, உணர்ச்சிகரமான, சிக்கல்களும்,சவால்களும், எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்த என்னுடைய அனுபவங்களை உங்களோடும் பகிர்ந்து கொள்வதற்காக மட்டுமே. --- இந்த வழக்கில் எங்களுக்கு நேர்ந்த மிகக் கடினமான முதல் வேலை — குடும்பத்திடம் ஸ்ரீனிவாஸ் இறந்து விட்ட செய்தியைச் சொல்வதுதான். ஒரு மனைவிக்கு, “உங்கள் கணவர் இறந்துவிட்டார்”என்று தொலைபேசியில் சொல்வது எவ்வளவு கொடுமையான விஷயம் என்பதை அந்த நேரத்தில் மட்டுமே உணர முடியும். அவரால் அதை நம்பவே முடியவில்லை. “என்னுடைய கணவருக்கு ஒன்றும் ஆகவில்லை… நீங்கள் உறுதியாகச் சொல்கிறீர்களா?” என்று மீண்டும் மீண்டும் கேட்டார். அவருடைய மகன் தொலைபேசியில் அழைத்து, “எங்கள் அப்பாவுக்கு என்ன ஆச்சு? என்ன ஆச்சு?” என்று கேட்டான். மச்சினனும் அழைத்து,“என்னதான் சார் ஆச்சு? எப்படி ஆச்சு?” என்று கேட்டார். வீட்டின் உரிமையாளர், ஊரில் இருந்தவர்கள் என ஒருவர் பின் ஒருவராகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். “அவர்தான் என்று எப்படி நாங்கள் நம்புவது?” “ஒரு புகைப்படமாவது அனுப்ப முடியுமா?” “தயவுசெய்து உறுதி செய்து சொல்லுங்கள்…” என்று பலவிதமான கேள்விகள். தவறொன்றுமில்லை. அது அவர்களுடைய இயல்பான எதிர்வினைதான். இதைப் பலமுறை எதிர்கொண்டிருக்கிறோம். ஒரு மனிதர் இறந்துவிட்டார் என்று சொன்னால், அதை உடனே நம்புவது யாராலும் முடியாது - அதுவும் அந்தக் குடும்பத்தினருக்கு அந்தச் செய்தி தரும் அதிர்ச்சியும் குழப்பமும் மேலும் அதிகமாகவே இருக்கும். அவர்களுக்கு முடிந்தவரை விவரங்களை விளக்கி, உண்மையைப் புரியவைத்தோம். --- அடுத்த சவால் — இந்தியாவில் இருந்து தேவையான ஆவணங்களைப் பெறுவது. அவர்கள் ஒரு பெரிய கிராமப்புற பகுதியில் இருந்தார்கள். மொழி வேறுபாடு. தொடர்புகொள்வதில் சிரமம். எதை எப்படி எழுத வேண்டும் என்பதில்கூட குழப்பம். ஒரு விஷயத்தைப் புரியவைக்கவே பல முறை பேச வேண்டிய நிலை. அவர்கள் பேசும் மொழியும் நமக்கு முழுமையாகப் புரியாததால், தகவல்களை ஒருவருக்கொருவர் புரிய வைப்பதே ஒரு பெரிய சவாலாக இருந்தது. எப்படியோ அவர்களிடம் புரியவைத்து, உத்தரப்பிரதேசத்தில் ஒரு வழக்கறிஞரை ஏற்பாடு செய்தோம். அவர் குடும்பத்தினர் இருக்கும் இடத்திற்குச் சென்று, தேவையான கடிதங்கள் மற்றும் ஆவணங்களைத் தயார் செய்து கொடுத்தார். இங்கே துபாயில் செய்ய வேண்டிய அனைத்து நடைமுறைகளையும் செய்து முடித்தோம். Police documents. Approvals. Embalming. Coffin. Ambulance. Flight. எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அங்கே இன்னும் ஒரு பெரிய சிக்கல் காத்திருந்தது. --- Police system-ல் ஒரு file இன்னும் “Unclaimed Body” என்று இருந்தது. இதுதான் முதலில் காவல்துறை பதிவு செய்தது. அதே நேரத்தில் மற்றொரு file-ல் சீனிவாஸின் பெயர் இருந்தது. இது அவர் அடையாளம் காணப்பட்டதன் பின் உருவாக்கப்பட்டது. அதாவது… இறந்தவர் ஒருவர்தான். ஆனால் அவர் பெயரில் இரண்டு File Numbers. “இரண்டு file-களும் ஒரே மனிதருக்கானது. எந்த file-ஐ வைத்து உடலை release செய்வது?” என்பதுதான் புதிய பிரச்சனை. மார்ச்சுவரியில் இருந்த போலீசார், “இந்த number-ஐ மாற்ற வேண்டும்.” என்றார்கள். அந்த number-ஐ வைத்திருந்த போலீஸ் நிலையத்திற்குச் சென்றால், அங்கிருந்த Duty Officer, “எங்களிடம் இருக்கும் number சரியானதுதான். மாற்ற வேண்டிய அவசியமில்லை.” என்றார்.