25/01/2025
மொழிப்போர் தியாகிகள் தினம்!
அன்னைத் தமிழைக் காக்க தன்னை அர்ப்பணித்த தமிழ்வீரர்கள், திராவிட இயக்கத் தீரர்களாம் மொழிப்போர் தியாகிகளை நினைவுகூரும் தினம் இன்று.
இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பே, மொழியுரிமைக்காக முன்னின்றவர்கள், திராவிட இயக்கத் தமிழர்கள். 1938-ஆம் ஆண்டு ராஜாஜியின் கட்டாய இந்தி எதிர்ப்புக்கு எதிராக, தந்தை பெரியார் போராட்ட அறைகூவல் விடுத்தார். தர்மாம்பாள் உள்ளிட்ட பெண்கள், தாய்மார்கள் குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் சிறைக்குச் சென்றார்கள். பட்டுக்கோட்டை அழகிரி தலைமையில் நடைபெற்ற நடைபயணம் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்ட நெருப்புக்கு நெய் வார்த்தது.
`ஓடி வந்த இந்திப்பெண்ணே, நீ நாடி வந்த கோழைநாடு இதுவல்ல’ என்று முத்தமிழறிஞர் கலைஞர் ,14வயதில் போராட்டக்களத்துக்கு வந்ததும் இந்த மொழிப்போரில்தான். சிறையிலேயே களப்பலியானார்கள் தாளமுத்து, நடராசன் என்னும் இரண்டு தீரர்கள்.
1948-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பிறகு மூன்றாவது மொழிப்போர் உச்சம் பெற்றது 1965-இல். `இந்தியே இந்தியாவின் ஆட்சிமொழி’ என்ற ஆணையை எதிர்த்து, `இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை இந்தி திணிக்கப்படாது’ என்ற நேருவின் வாக்குறுதியைக் காக்க கோரி, திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டக்களத்தில் குதித்தது. தமிழ்நாடெங்கும் மாணவர்கள் போராட்டத்தில் இணைந்தனர்.
தமிழ்மொழியைக் காக்கத் தன்னுடைலை நெருப்புக்குத் தந்தார் கீழப்பழுவூர் சின்னச்சாமி. அதைத் தொடர்ந்து கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், முத்து, சாரங்கபாணி, வீரப்பன் என்று அடுத்தடுத்து தியாகங்கள் அணிவகுத்தன. அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் ராஜேந்திரன் காவல்துறையின் துப்பாக்கிக் குண்டுக்குத் தன் நெஞ்சைக் காட்டி மரணமடைந்தார். எண்ணற்றோரின் தியாகத்தால் இந்தித் திணிப்பு என்னும் இருள் விலகியது. மொழியுரிமையை நிலைநாட்டியது நம் திராவிட முன்னேற்றக்கழகம்.
இன்றும் ஒன்றிய பா.ஜ.க. அரசு வாய்ப்பு கிடைக்கும்போது, எல்லாம் இந்தியைத் திணிக்கப் பார்க்கிறது. அதை முறியடிக்க முன்நிற்கிறது கழகம்.
மொழிப்போர் தியாகிகளின் நினைவுகளை நெஞ்சில் ஏந்துவோம். மொழியுரிமை காக்கும் போராட்டம் தொடர்வோம்!
#தமிழ்காத்த_திசைகாட்டிகள்