20/06/2025
சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் பணம் குறித்த தகவல்களை சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டுள்ளது. 3.5 பில்லியன் சுவிஸ் பிராங்க், அதாவது 37,600 கோடி இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கிகளில் உள்ளது என்று சுவிஸ் தேசிய வங்கி தெரிவித்துள்ளது. இப்படி சுவிஸ் வங்கிகளில் போடப்படும் இந்தப் பணம் கறுப்புப்பணமே என்பது எல்லோரும் அறிந்ததே. இந்த கறுப்புப்பணம் கடந்த ஆண்டைவிட 3 மடங்கு அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
‘நான் இந்தியாவின் பிரதமர் ஆனால் வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்டுக்கொண்டுவந்து ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவேன்’ என்றார் நரேந்திரமோடி. அவர் ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டன. சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்பு பணம் மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறதே தவிர குறையவும் இல்லை; நம் வங்கி கணக்குகளில் 15 லட்சமில்லை, 10 பைசா கூட மோடியின் அரசு செலுத்தவுமில்லை.
2016-ல் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தபோது அந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை கள்ள நோட்டு, கறுப்பு பணம், தீவிரவாதிகள் தாக்குதல் ஆகியவற்றை முற்றிலும் ஒழித்துவிடும் என்றார். 2000 ரூபாய் நோட்டுகளுக்கே கள்ள நோட்டுகள் வந்தன; பெஹல்ஹாம் தாக்குதல் வரை பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்கின்றன. இப்போது கறுப்பு பணமும் அதிகரித்திருக்கிறது.
மோடியின் இத்தகைய நடவடிக்கைகளைப் பார்க்கும்போது ‘வாய்ச்சொல்லில் வீரரடி’ என்ற பாரதியாரின் வரிதான் நினைவுக்கு வருகிறது.