17/07/2026
ஊடகச் செய்தி
மழைக்கால கூட்டத் தொடரில் தொகுதி மறுசீரமைப்பு சட்டத்தை நிறைவேற்ற மோடி அரசு திட்டம்! எதிர்க்கட்சிகள் உறுதியுடன் நின்று முறியடிக்க வேண்டும் !
கூட்டறிக்கை
ஜூலை 20 ஆம் நாள் நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க இருக்கிறது. இக்கூட்டத் தொடரில் தொகுதி மறுசீரமைப்பு, பொது சிவில் சட்டம், ஒரே தேசம், ஒரே தேர்தல் ஆகிய சட்டங்களை நிறைவேற்றும் நோக்கத்தில் மோடி அரசு செயல்பட்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் 17 ஆம் நாள் மோடி அரசு முன்வைத்த தொகுதி மறுசீரமைப்புக்கான சட்ட வரைவு மக்களவையில் தோற்கடிக்கப்பட்டது. அன்று மக்களவையில் வாக்களித்த 528 உறுப்பினர்களில் 298 பேர் ஆதரித்தும் 230 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர். அதை நிறைவேற்றுவதற்கு தேவையான 3 இல் 2 பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அதை நிறைவேற்ற முடியவில்லை.
இந்நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை மிரட்டியும் ஆசை காட்டியும் தன் பக்கம் வளைக்கும் வேளையில் தீவிரம் காட்டி வருகிறது பாசிச மோடி அரசு.
மாநிலங்களவையில் இன்றளவில் உள்ள 242 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ( தேஜகூ ) 141 இடங்கள் இருக்கின்றன. நியமனம் செய்யப்பட்ட, தனி நபர் உறுப்பினர்கள் 10 பேரை கணக்கில் கொண்டால் 151 என்ற எண்ணிக்கையை தேஜகூ தொட்டுவிடும்.
மாநிலங்களவையில் மொத்த எண்ணிக்கை 245
3 இல் 2 பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை 164
தே ஜ கூ 151
பிஜூ ஜனதாதளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசு – 9
மேற்கு வங்கத்தில் உள்ள 3 காலி இடங்கள் நிரப்பப்பட்டால் அதுவும் தேஜ கூட்டணிக்கே போகும் – 163
மாநிலங்களவையில் 3 ல் 2 பெரும்பான்மை பெறுவதற்கு கூடுதலாக இன்னும் ஒருவர் வாக்களித்தால் போதுமானது.
மோடி அரசு திரினாமுல் காங்கிரசு, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளை உடைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களில் யாராவது ஒருவரை ஆதரிக்க வைப்பது கடினமானது இல்லை.
மக்களவையில் நிலை என்ன?
தேஜகூ – 293 வாக்குகள்.
திரினாமுல் காங்கிரசுக்கு இருந்த 29 எம்.பிக்களில் 20 பேர் அக்கட்சியில் இருந்து வெளியேறி Nationalist Citizen Party of Inida ( NCPI ) கட்சியில் இணைவதாக தெரிவித்துவிட்டனர். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனாவில் இருந்து வெளியேறியவ எம்.பி.க்களில் 6 பேர் தேஜகூ வை ஆதரிப்பதாக அறிவித்துவிட்டனர். . இப்போது சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசு தேஜ கூட்டணியில் இணையப்போவதாக செய்திகள் வருகின்றன. இதன் மூலம் கூடுதல் எட்டு எம்.பி. களின் ஆதரவு கிடைக்கும். இவற்றின் மூலம் 327 இடங்கள் ( 293 + 20 + 6 + 8 ) தேஜகூ க்கு கிடைத்துவிடும் 3 இல் 2 பெரும்பான்மையை எட்டுவதற்கு இன்னும் 35 வாக்குகள் தேவை. ஒ.எஸ்.ஆர். காங்கிரசு, பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகள் தேஜகூ வில் இல்லாவிட்டாலும் முக்கிய திருத்தங்களின் போது அவற்றை ஆதரித்தே வந்துள்ளன.
இத்தகைய நிலையில் 22 மக்களவை உறுப்பினர்களை வைத்திருக்கும் திமுக, வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலோ அல்லது தொகுதி மறுசீரமைப்பு சட்டத்தை ஆதரித்து வாக்களித்தோ அச்சட்டத்தை வெற்றி பெறச் செய்யக்கூடும் என்று ஊடகங்களிலும் இந்துத்துவ வட்டாரங்களிலும் பேசப்படுகிறது.
மேலே குறிப்பிட்ட சட்டங்கள் இயற்றப்பட்டு அவை அரசமைப்புச் சட்டத்தின் பகுதியாக மாறும் நிலையில் அதை இந்துராஷ்டிரத்திற்கான அரசமைப்புச் சட்டமாகவே கருத முடியும். எனவே இச்சட்டங்களை இயற்றவோ அல்லது செயல்படுத்தவோ விடக் கூடாது.
மக்களவையிலும் மாநிலங்களவையிலும் இடம்பெற்றுள்ள திமுக மட்டுமின்றி, தேஜகூ க்கு வெளியே இருக்கும் காங்கிரசு, சிபிஐ, சிபிஐ ( எம்), விசிக , ஐ.யு.எம்.எல்., மதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்குபெற்றுள்ள அதிமுகவின் தமிழ்நாட்டை சேர்ந்த உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் போது கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும். சட்டத் திருத்தங்களை எதிர்த்து வாக்களிக்க வேண்டும்.
இதற்கு மாறாக வாக்கெடுப்பு நடக்கும் நாளில் அவைக்கு செல்லாமல் விடுப்பு எடுப்பது, வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் அவையில் இருந்து வெளியேறுவது ஆகிய நகர்வுகளை செய்தால் அது மோடி அரசின் சட்டத் திருத்த முயற்சிகளுக்கு துணை நிற்பதே ஆகும்.
மாநிலத்தில் ஆட்சியில் இருப்பதை மட்டுமே முதன்மை பிரச்சனையாக மாற்றிக் கொண்டு தவெக எதிர் திமுக என்ற இரு முனை அரசியலில் தமிழ்நாடு மூழ்கடிக்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த நாளில் இருந்து பாசிச பாசக எதிர்ப்பு என்பது முதன்மை அற்றதாக மாறிப் போயுள்ளது. இந்த போக்கு நீடித்தால் பாசிச பாசக வின் தாக்குதலை எதிர்த்து நின்று முறியடிப்பதற்கான போராட்டம் இல்லாமலே போய்விடும்.
வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மோடி அரசு நடத்தவுள்ள தாக்குதல்களை முறியடிப்பதற்கு எதிர்க்கட்சிகள் அணியமாக வேண்டும். குறிப்பாக, தொகுதி மறுசீரமைப்பு, பொதுசிவில் சட்டம், ஒரே தேசம், ஒரே தேர்தல் ஆகிய சட்டங்களை இயற்றத் துடிக்கும் மோடி அரசின் திட்டத்தை எதிர்க்கட்சிகள் உறுதியுடன் நின்று முறியடிக்க வேண்டும்
இப்படிக்கு,
தியாகு,
பொதுச்செயலாளர்,
தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்
செந்தில்,
ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
மனோகரன்,
மாநில செயலாளர்,
சிபிஐ (எம்-எல்) ரெட் ஸ்டார்
மணி,
மாநில அமைப்பாளர்,
பாட்டாளி வர்க்க சமரன் அணி
தொடர்புக்கு: 9941931499