22/09/2026
டாஸ்மாக் பார்களில் உணவுக் கூடம் அமைக்க அனுமதிக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும்!
மதுவை கட்டுப்படுத்த வேண்டிய அரசு, மதுபானக் கூடங்களை மேலும் வசதிப்படுத்துவது ஏற்க முடியாது!
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் – தமிழ்நாடு கண்டனம்
டாஸ்மாக் பார்களில் வாடிக்கையாளர்களுக்காக உணவுக் கூடங்களை அமைத்து நடத்த அனுமதிக்கப்படும் என்றும், இதற்கான புதிய டெண்டர் ஒரு மாதத்திற்குள் விடப்படும் என்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
டாஸ்மாக் பார்களில் சுகாதாரமற்ற உணவுகள் விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதற்காகவே உணவுக் கூடங்களை அமைக்க அனுமதிப்பதாக அமைச்சர் கூறியிருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணமாக இல்லை. உணவின் தரத்தை கண்காணிப்பதற்காக மதுபானக் கூடங்களையே உணவுக் கூடங்களாக விரிவுபடுத்துவது எந்த வகையிலும் தீர்வாகாது.
தமிழ்நாட்டில் மதுப்பழக்கத்தால் குடும்பங்கள் பாதிக்கப்படுவது, பெண்கள் மீது குடும்ப வன்முறை அதிகரிப்பது, குடும்பத்தின் வருமானம் மதுவுக்கு செலவிடப்படுவதால் குழந்தைகளின் கல்வி மற்றும் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகள் சட்டம் ஒரு
ஒழுங்கு பாதிக்கப்படுவது போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து கவலையளித்து வருகின்றன.
இத்தகைய சூழலில், மது அருந்துவதற்கான இடங்களில் உணவையும் அதே இடத்தில் வழங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்துவது மதுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இருக்காது.
மதுபானக் கூடங்களின் செயல்பாட்டை மேலும் இயல்பாக்கி விரிவுபடுத்தும் நடவடிக்கையாகவே அமையும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, குடும்பங்களின் நலன், இளைஞர்களின் எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அரசு மதுபான விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் அல்லாமல், மதுப்பழக்கத்தைக் குறைக்கும் வகையில் கொள்கைகளை உருவாக்க வேண்டும். மதுபான விற்பனையை அரசு வருமானத்திற்கான வழியாக பார்க்கும் தமிழகத்தின் நீண்ட கால கொள்கை மாற்றப்பட வேண்டும்.
டாஸ்மாக் பார்களில் உணவுக் கூடம் அமைப்பதற்கான புதிய டெண்டர் அறிவிப்பை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.
டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரி, குடியிருப்புப் பகுதிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள மதுக்கடைகள் குறித்து கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும்.
மதுப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் மறுவாழ்வு மற்றும் ஆலோசனை மையங்களை அதிகரிக்க வேண்டும்.
போதை நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் ஆதரவு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும்;
மதுவிற்பனை மூலம் கிடைக்கும் வருவாயை அதிகரிப்பதைவிட, மக்களின் குடும்ப நலனுக்கும் சமூக நலனுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஏற்காது.
எனவே, டாஸ்மாக் பார்களில் உணவுக் கூடம் நடத்த அனுமதிக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்து கைவிட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தமிழ்நாடு மாநில குழு வலியுறுத்துகிறது.
ஜி.பிரமிளா
அ.ராதிகா
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்