03/09/2026
பத்திரிக்கை செய்தி
03.09.2026
அம்பாள் நகருக்கு சாலை அமைக்க கோரிய தொடர் உண்ணா நிலை, தொடர் முழக்கப் போராட்டத்திற்கு கிடைத்த முதல் கட்ட வெற்றி!
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், கெங்கரை ஊராட்சியில் உள்ள மலை கிராமமான அம்பாள் நகர் ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் மக்கள் சாலை வசதி கோரி அரசிடம் கோரிக்கை வைத்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
இவர்களது குடியிருப்பிலிருந்து முதன்மை சாலைக்கு சாலை அமைப்பதற்குத் தடையாகச் சில தனியார் நில உரிமையாளர்களுக்குச் சொந்தமான நிலங்கள் உள்ளன. அதனை ஆதி திராவிடர் நலத்துறை மூலம் கட்டாய நில எடுப்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தி சாலை அமைத்துத் தருமாறு அரசிடம் கோரிக்கை வைத்து பல போராட்டங்களை மக்கள் நடத்தியுள்ளனர்.
ஜூலை 2025 முதல் மக்கள் அதிகாரக் கழகம் அம்பாள் நகர் மக்களுடன் இணைந்து இப்பிரச்சினைக்காக ஒரு வருடமாக போராடி வருகிறது. இதன் தொடர்ச்சியாக 2026 ல் த.வெ.க. ஆட்சி அமைந்த பின்னர் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு அவர்களை அம்பாள் நகர் மக்களை இணைத்துக் கொண்டு ஜீலை-13 அன்று நேரில் சந்தித்து மனு கொடுத்தோம். மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் போராட்டத்தின் தீவிரத்தை அரசிற்கு உணர்த்த ஆகஸ்ட் 9 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு முன்னர் அரசு அதிகாரிகள் ஒன்பது பேர் அம்பாள் நகருக்கு வந்து 15-20 நாட்களில் சாலை அமைத்து தருகிறோம் என வாக்குறுதி தந்து ஆர்ப்பாட்டத்தை கைவிடக் கோரினர்.
அரசு அதிகாரிகள் வாக்குறுதி அளித்த 15 நாட்கள் கடந்தும் சாலை அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை.
இதன் காரணமாக கோத்தகிரி நகரத்தில் தொடர் உண்ணா நிலை தொடர் முழக்கப் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கடிதம் காவல்துறையிடம் வழங்கியிருந்தோம். அவர்கள் அனுமதி மறுத்ததால் ஆகஸ்ட் 27 அன்று காலை 11.00 மணிக்கு தொடர் உண்ணா நிலை தொடர் முழக்க போராட்டத்தை அம்பாள் நகரில் உள்ளிருப்பு போராட்டமாக பந்தல் அமைத்து தொடங்கினோம். இப்போராட்டம் ஆகஸ்ட்-27 தொடங்கி ஆகஸ்ட்-31 வரை ஐந்து நாள் நீடித்து முதல் கட்ட வெற்றியை சாதித்தது.
முதல் நாளில் இருந்து ஐந்து நாள் வரை கழக மாநில இணைச்செயலாளர் தோழர் மாறன் மற்றும் கோத்தகிரி கிளைச் செயலாளர் தோழர் சண்முகநாதன் இருவரும் உண்ணா நிலை போராட்டத்தை மேற்கொண்டனர். அம்மாள் நகர் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என ஒட்டுமொத்த ஊர்மக்களும் இரவு பகலாகப் தங்களது உரிமைக்கான போராட்டக் களத்தில் திரளாக தினமும் கலந்துகொண்டனர். இப் போராட்டத்திற்கு கோத்தகிரி பகுதியைச் சார்ந்த ஜனநாயக சக்திகளும் பல ஊர் மக்களும் ஊர் தலைவர்களும் நேரடியாக வந்து ஆதரவளித்தனர்.
முதல் இரண்டு நாள் அரசு அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தியது தோல்வி அடைந்தது. அவர்கள் அம்பாள் நகருக்கு சாலை அமைப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து வேலைகளையும் முடித்து தலைமை செயலகம் அனுப்பி விட்டோம், அங்கிருந்து ஆணை வந்தால் சாலை அமைத்து தருகிறோம் என வாய் வழியாக வாக்குறுதி தந்ததை ஏற்று போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர்.
அரசு அதிகாரிகள் மீது நம்பிக்கை இழந்த கழகமும் அம்பாள் நகர் மக்களும் எமது கோரிக்கையான, அரசு அதிகாரிகள் சாலை அமைத்து தருகிறோம் என்ற வாக்குறுதியை வாய்மொழியாக அல்லாமல் எழுத்துப்பூர்வமாக தர வேண்டும் அல்லது பொறுப்பு அமைச்சர் எழுத்துப்பூர்வமாக தர வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக நின்று போராட்டத்தை மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து வந்தோம்.
இந்த மூன்று நாள் தொடர் உண்ணா நிலை போராட்டம் அரசு அதிகாரிகளுக்கு நெருக்கடியை உருவாக்கியது.
நான்காவது நாள் மறுபடியும் அரசு அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். எங்களது கோரிக்கைகளை ஏற்கவில்லை. பின்னர் உண்ணாநிலை போராட்டம் மேற்கொள்ளும் தோழர்களின் உடல்நிலையைக் காரணம் காட்டி போலீஸ் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. அங்கும் தோழர்கள் இருவரும் உண்ணா நிலை போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர். போராடும் மக்களின் கோரிக்கையை செய்துதர மறுத்து போராட்டத்தை வலுவிழக்க போலீஸ் செய்த நடவடிக்கையை கண்டித்து இ-போஸ்டர் வெளியிட்டோம்.
மேலும் போராட்டப் பந்தலில் இருந்து தோழர்கள் இருவரையும் போலீஸ் அழைத்துச் சென்ற நேரம் முதல் கோத்தகிரி கிளை இணைச் செயலாளர் தோழர் ஆறுமுகம், தோழர் அருணாச்சலம், தோழர் மோகன்ராஜ் மூவரும் போராட்டப் பந்தலில் உண்ணா நிலை போராட்டத்தை மேற்கொண்டனர்.
அம்பாள் நகருக்கு சாலை வசதி கோரி இருவர் மேற்கொண்ட உண்ணா நிலை போராட்டம் ஐவர் மேற்கொள்ளும் போராட்டமாக வலுவடைந்தது. போராட்டத்தின் ஐந்தாம் நாளான ஆகஸ்ட்-31 அன்று மதியம் கோத்தகிரி அனைத்து கட்சிகள் இயக்கங்கள் சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தி அம்பாள் நகர் மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, வட்டாட்சியரிடம் மனுவாக கொடுத்து அதற்கு பதில் அளிக்குமாறும் மனுவில் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து மக்கள் போராட்டத்திற்கு பணிந்த அரசு, அனைத்து கட்சிகள் இயக்கங்கள் சார்பாக கொடுக்கப்பட்ட மனுவிற்கு வட்டாட்சியர் பதில் தருவதாகவும் மனுவை பெற்றுக் கொண்டதாகவும் ஒப்புகை சீட்டில் வட்டாட்சியர் கையெழுத்திட்டு அம்பாள் நகருக்கு சாலை அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்து நம்மிடம் தந்தார்.
இதன் அடிப்படையில் மக்கள் கோரிக்கையை வலியுறுத்தி உண்ணா நிலைப் போராட்டத்தை ஐந்து நாளாக தொடர்ந்த கழக மாநில இணைச் செயலாளர் தோழர் மாறன், கோத்தகிரி கிளைச் செயலாளர் தோழர் சண்முகநாதன் மற்றும் ஆகஸ்ட்-30 முதல் ஆகஸ்ட்-31 வரை இரண்டு நாள் உண்ணா நிலைப் போராட்டத்தை தொடர்ந்த கோத்தகிரி கிளை இணைச் செயலாளர் தோழர் ஆறுமுகம், தோழர் அருணாச்சலம், தோழர் மோகன்ராஜ் ஆகிய தோழர்கள் ஐவரும் உண்ணா நிலைப் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். இந்த முதல் கட்ட வெற்றியை இனிப்புகள் வழங்கி அம்பாள் நகர் மக்கள் கொண்டாடினர்.
செப்டம்பர்-1 அன்று அம்பாள் நகர் மக்கள் கழகத் தோழர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அம்பாள் நகர் மக்களுடன் கழகத் தோழர்கள் இணைந்து குழுப் புகைப்படமும் எடுக்கப்பட்டது.
இந்த முதல் கட்ட வெற்றியை தொடர்ந்து அம்பாள் நகர் மக்களுக்கு தமிழ்நாடு அரசு சாலை அமைத்துத் தரும் வரை அம்பாள் நகர் மக்களுடன் இணைந்து மக்கள் அதிகாரக் கழகம் போராட்டங்களை முன்னெடுக்கும்!
தகவல்:
மக்கள் அதிகாரக் கழகம்,
கோத்தகிரி கிளை,
கோவை மாவட்டம்-9488902202.