தமிழக வாழ்வுரிமைக் கட்சி குளச்சல் நகரம்

  • Home
  • India
  • Colachel
  • தமிழக வாழ்வுரிமைக் கட்சி குளச்சல் நகரம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி குளச்சல் நகரம் தமிழகத்தின் வாழ்வுரிமையை மீட்டெடுக?

14/03/2026

கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கும் கேரள அரசின் தன்னிச்சையானப் போக்கைக் கண்டிக்கிறோம்!

தமிழக கேரள எல்லைப் பகுதியில், கூடலூர் அருகே தமிழக அரசின் ஒப்புதலின்றி கேரள அரசு ஒருதலைப்பட்சமாக எல்லை அறிவிப்புப் பலகைகளை நட்டுள்ள செய்தி, பேரதிர்ச்சியையும் மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது. அண்டை மாநிலங்கள் பேண வேண்டிய கண்ணியத்தையும், ஜனநாயக மரபுகளையும் காலில் போட்டு மிதிக்கும் இச்செயலை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

இரு மாநிலங்களுக்கு இடையிலான எல்லை என்பது சட்டரீதியான ஆவணங்களின் அடிப்படையில் அமைய வேண்டிய ஒன்று. ஆனால், தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமல், தன்னிச்சையாக எல்லைக் கோடு கிழிப்பது அப்பட்டமான ஆக்கிரமிப்புப் போக்காகும்.

பல ஆண்டுகாலமாகத் தமிழகமும் கேரளாவும் பகிர்ந்து வரும் சகோதரத்துவ உறவில் இத்தகைய அத்துமீறல்கள் விரிசலை உண்டாக்குகின்றன. இது அண்டை மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவைச் சீர்குலைக்கும் திட்டமிட்ட செயலாகும்.

எல்லையோரப் பகுதிகளில் வாழும் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களது நில உரிமையையும் கேள்விக்குறியாக்கும் வகையில் கேரள அரசு பதற்றத்தை விதைத்து வருகிறது.

தமிழகத்தின் ஒவ்வொரு அங்குல நிலமும் நமது தொப்புள்கொடி உறவுகளின் இரத்தமும் சதையுமாகும். நிலப்பரப்பு, மொழி அடையாளம் மற்றும் வரலாற்று உரிமைகளை எள்ளளவும் விட்டுக்கொடுக்க முடியாது என்பது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சமரசமற்ற நிலைப்பாடாகும்.

எனவே, இந்த விவகாரத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு, உயர்மட்டக் குழு மூலம் கள ஆய்வு நடத்தி, கேரள அரசின் ஆக்கிரமிப்பு முயற்சிகளை முறியடிக்க வேண்டும். தமிழகத்தின் எல்லைக் காவலில் எவ்விதத் தொய்வும் ஏற்படாதவாறு உறுதியான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.

தமிழகத்தின் தார்மீக உரிமைகளைச் சீண்ட நினைப்பவர்கள் எவராயினும், அதனைத் தமிழக மக்கள் ஒருபோதும் வேடிக்கைப் பார்க்க மாட்டார்கள். நிலமும் மொழியும் எமது உயிர். அதனைத் தற்காக்க எத்தகையப் போராட்டங்களையும் முன்னெடுக்கத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தயங்காது எனவும் எச்சரிக்கிறோம்.

14/03/2026

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு, ஒன்றிய அரசு உடந்தையா?
மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவை, சிதைக்கப் பார்ப்பது யார்?

கர்நாடக அரசு, காவிரி நதியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்தை மீண்டும் முன்னெடுத்து, அதற்கான திருத்தப்பட்ட விரிவானத் திட்ட அறிக்கையை ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்க முடிவு செய்திருப்பது, தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும், காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் எதிரான நடவடிக்கையாகும்.

பெங்களூரு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் குடிநீர் தேவைக்கென, கர்நாடக அரசு இத் திட்டத்தை முன்வைக்கிறது என்றாலும், காவிரி நீர்ப் பகிர்வு தொடர்பாக, உச்சநீதிமன்றமும் காவிரி நடுவர் மன்றமும் வழங்கியுள்ள உத்தரவுகளின் அடிப்படையில், தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவு குறையும் அபாயம் இத் திட்டத்தில் மறுக்க முடியாத வகையில் இருக்கிறது.

மேகதாது அணை கட்டப்பட்டால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து பாதிக்கப்படும். இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள இலட்சக்கணக்கான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அந்தப் பகுதியின் பொருளாதார அமைப்பு கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதோடு. தமிழ்நாட்டு மக்களும் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாவார்கள்.

தமிழ்நாடு ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வரும் நிலையில், காவிரி நீரை மேலே சேமித்து வைக்கும் வகையிலான எந்தத் திட்டமும், தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதிக்கும் என்பதை கர்நாடக அரசு புரிந்துகொள்ள வேண்டும். மேலும், இத் திட்டத்தைக் கர்நாடகாவின் வெற்றி என்று கூறுவது, மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவுகளுக்கும் கூட்டாட்சி முறைக்கும் ஏற்றதல்ல.

எனவே, தமிழ்நாடு அரசு
மேகதாது அணைத் திட்டம் தொடர்பாக, சட்டரீதியான அனைத்து வாய்ப்புகளையும் முழுமையாகப் பயன்படுத்தி, கடுமையான சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

காவிரி நீர்ப் பகிர்வு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் நடுவர் மன்ற உத்தரவுகளை மீறக்கூடிய எந்த நடவடிக்கையையும், ஒன்றிய அரசு அனுமதிக்கக் கூடாது என்பதை உறுதியாக வலியுறுத்த வேண்டும்.

காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், தமிழ்நாட்டின் நீர்வள உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில், அரசியல் ரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தின் நீர்வள உரிமைகள், தமிழர் வாழ்வாதாரம் ஆகியவை, எந்த நிலையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதே தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் உறுதியான நிலைப்பாடாகும்.

மேகதாது அணைத் திட்டத்தை, தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்த்து, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

14/03/2026

உலக மகளிர் தின வாழ்த்துகள்!

மகளிர் என்பது ஒரு குடும்பத்தின் அன்பு நிழல் மட்டுமல்ல. ஒரு சமூகத்தின் உறுதியான முதுகெலும்பும், ஒரு நாட்டின் வளர்ச்சிப் பாதையை வழிநடத்தும் உயிர்த்துடிப்பும் ஆகும்.
தாயாக மனிதத்தை விதைப்பதும், ஆசிரியராக அறிவை விதைப்பதும், போராளியாக அநீதிக்கு எதிராக எழுந்து நிற்பதும் பெண்களின் பெருமை நிறைந்த குணமாகும்.

தமிழர் வரலாற்றின் ஒவ்வொரு காலத்தையும் திறந்து பார்த்தால், வீரமும் தியாகமும் கலந்த பல பொற்காலங்களைத் தமிழ்ப் பெண்கள் உருவாக்கியிருப்பதைக் காண முடியும்.

தமிழ் மொழியின் மரியாதைக்கும், தமிழர் உரிமைக்கும், இந்த மண்ணின் சுதந்திரத்திற்கும் பெண்கள் தங்கள் வாழ்வையே அர்ப்பணித்துப் போராடிய வரலாறு நமக்கு பெருமிதம் அளிக்கிறது.

அடக்குமுறைகளுக்கும் அநீதிகளுக்கும் தலைகுனியாமல் எழுந்து நின்ற தமிழ்ப் பெண்களின் துணிச்சல், தமிழரின் போராட்ட வரலாற்றில் அழியாத அடையாளமாக இன்றும் திகழ்கிறது.

தமிழகத்தின் உரிமைக்காகக் குரல் கொடுத்த பெண்களும், சமூக நீதிக்காகத் தெருக்களில் போராடிய பெண்களும், தங்கள் உயிரையே முன் வைத்து போராட்டங்களில் பங்கெடுத்தத் தமிழ்மகள்களும், இன்று நம் நினைவில் மாவீரர்களாகவும், போற்றுதலுக்கு உரியவர்களாகவும் நிலைத்து நிற்கிறார்கள்.

அவர்களின் தியாகமும் துணிவும், அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டும் ஒளியாக இருக்கிறது.
ஒரு சமூகத்தின் உண்மையான முன்னேற்றம் என்பது, பெண்கள் மரியாதையுடன், சமத்துவத்துடன், பாதுகாப்புடன் வாழும் போது தான் உருவாகும் என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்த உலக மகளிர் தினம், பெண்களின் சாதனைகளைப் போற்றும் நாளாக மட்டும் இல்லாமல், அவர்களின் உரிமைகள் மேலும் வலுப்பெறும் நாளாகவும் அமைய வேண்டும்.

உலகெங்கும் வாழும் பெண்கள், தங்கள் திறமையாலும் துணிச்சலாலும், சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் உயரங்களை எட்ட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி மனமார வாழ்த்தி மகிழ்கிறது.

Address

Colachel

Alerts

Be the first to know and let us send you an email when தமிழக வாழ்வுரிமைக் கட்சி குளச்சல் நகரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share