03/09/2026
ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகள் மீதான போராட்ட வழக்குகள் ரத்து என முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
முந்தைய ஆட்சி காலங்களில் போடப்பட்ட போராட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும்!
மக்கள் அதிகாரக் கழகம் கோரிக்கை
பத்திரிகைச் செய்தி
03.09.2026
நேற்றைய நாள் (செப்டம்பர் 02, 2026) சட்டமன்றக் கூட்டத்தொடரில் விதி 110-இன் கீழ் முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பில், “கடந்த 2021 மே முதல் 2026 ஏப்ரல் வரை, தங்களது வாழ்வாதாரம், உரிமைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும்” என்று அறிவித்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் வாழ்வாதார உரிமைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக விஜய் தெரிவித்துள்ளார். ஆனால், கடந்த ஆட்சி காலம், அதற்கு முந்தைய ஆட்சி காலம் ஆகியவற்றில் மக்களுடைய பிரச்சினைகளுக்காகப் போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படவில்லை. அதிலும், கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீதான வழக்குகள் மட்டுமே ரத்து செய்யப்படுகின்றன.
இதே போலவே கடந்த ஆட்சியின் போது அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமார் 5,000 வழக்குகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். அறிவித்த போதும் கூட பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. அதைப்போலவே முதலமைச்சர் விஜய்யும் தற்பொழுது பொதுவாக அறிவித்திருக்கிறார். முதலமைச்சர் விஜய் மேற்கண்ட அறிவிப்பினை கூட சட்டமன்றத்தில் யாரும் விவாதிக்க முடியாத வகையிலான விதி 110-இன் கீழ் அறிவித்துள்ளார் என்பது கண்டிக்கத்தக்கதாகும்.
ஒவ்வொரு ஆட்சியாளர்களும் ஆட்சிக்கு வந்த பின்னர் குறிப்பான சில வழக்குகளை மட்டும் ரத்து செய்துவிட்டு, தங்களுடைய ஆட்சியில் போராடுகின்ற மக்கள் மீது அதைவிட பல மடங்கு வழக்கு போடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். கடந்த ஆட்சி காலத்தில் போராடிய ஆசிரியர்கள், விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ள விஜய் அரசு, கடந்த மூன்று மாதங்களில் பதியப்பட்டபோராட்ட வழக்குகள் எதையும் ரத்து செய்வதாக அறிவிக்காதது குறிப்பிடத்தக்கது.
கடந்த மற்றும் அதற்கு முந்தைய ஆட்சிக் காலங்களில் பொதுமக்கள் பிரச்சினைகளுக்காக, குறிப்பாக டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம், ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டம், தூத்துக்குடி ஸ்டெர்லைட்-க்கு எதிரான போராட்டம், மீத்தேன் எதிர்ப்பு போராட்டம், சமச்சீர் கல்விக்கான போராட்டம் உள்ளிட்ட பொதுமக்களின் போராட்டங்கள், மக்களுடைய அடிப்படைத் தேவைகளுக்கான போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது தொடர்ந்து பல வழக்குகள் போடப்பட்டன. அப்போராட்டங்களுக்கு தலைமை தாங்கியவர்கள் மீது பொய்யாகப் பதியப்பட்ட குண்டர் சட்டத்தின் அடிப்படையில் அவர்களை கைது செய்வது மற்றும் போக்கிரி தாளில் பராமரிப்பது போன்ற அராஜக நடவடிக்கைகளை போலீசு இப்போது வரை மேற்கொண்டு வருகிறது.
மக்கள் அதிகாரக் கழகத்தின் கடலூர் மாவட்டச் செயலாளர் தோழர் முருகானந்தம் மற்றும் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் தோழர் செல்வம் ஆகியோர் மீதும் பொய்யாகப் போக்கிரித்தாள் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, வெல்ஃபேர் கட்சியின் துணைத் தலைவர் தோழர் கௌஸ் ஆகியோர் மீதும் போக்கிரித்தாள் பொய்யாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. மக்களுக்காகப் போராடுகின்ற தலைவர்களை ரவுடிகளாக காட்டும் போலீசின் இந்நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதற்கு எதிராக தொடர்ந்து மக்கள் அதிகாரக் கழகம் குரல் கொடுத்து வருகிறது. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சர் விஜய்க்கு கழக வழக்கறிஞர் அணி சார்பாக ஏற்கெனவே கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே, கடந்த மற்றும் அதற்கு முந்தைய ஆட்சி காலங்களில் பொதுமக்களுடைய அடிப்படை பிரச்சினைகள், தமிழ்நாட்டின் அரசியல் உரிமை பிரச்சினைகள், நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகளுக்காகப் போராடிய மக்கள், தலைவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்; பொதுமக்களின் பிரச்சினைகளுக்காகப் போராடியவர்கள் மீது பொய்யாகப் புனையப்பட்டுள்ள போக்கிரித்தாள் பராமரிப்பு என்ற அராஜக நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321