19/08/2026
நகர்ப்புறங்களை மேம்படுத்தும் ‘Better Cities’ பிரச்சாரம் – இளைஞர் காங்கிரஸ்
நாகர்கோவில், ஆக.19,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாநகர இளைஞர் காங்கிரஸ் சார்பாக நகர் புறங்களை மேம்படுத்தும் பிரச்சாரம் குறித்து கூட்டம் நாகர்கோவில் மாநகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் நாகர்கோவில் மாநகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன் செய்தியாளர் சந்திப்பின் போது கூறியதாவது :-
இந்திய இளைஞர் காங்கிரஸ் சார்பில் “IYC Better Cities – Urban City Campaign” என்ற பெயரில் நகர்ப்புறங்களை மேம்படுத்துவதற்கான பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.
நகர்ப்புறங்களில் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை கண்டறிந்து, அவற்றை மக்கள் கவனத்திற்கும் அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்வதே இப்பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாகும்.
சாலைகள் மற்றும் போக்குவரத்து வசதி, குடிநீர், தூய்மை மற்றும் குப்பை மேலாண்மை, கழிவுநீர் வசதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நகர்ப்புற தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, சிறந்த மற்றும் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற நகரங்களை உருவாக்கும் நோக்கில் இந்தப் பிரச்சாரம் செயல்படுத்தப்படுகிறது.
“Better Cities” என்பதன் பொருள் “சிறந்த நகரங்கள்” அல்லது “மேம்பட்ட நகரங்கள்” என்பதாகும். நகரங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, அனைவருக்கும் தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கச் செய்வதே இந்த இயக்கத்தின் நோக்கமாக வலியுறுத்தப்படுகிறது.
நகர்ப்புற சமூகங்கள் மற்றும் தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஒருங்கிணைத்து, “சிறந்த நகரங்களை ஒன்றிணைந்து உருவாக்குவோம்” என்ற கருத்தை முன்னிறுத்தி இந்திய இளைஞர் காங்கிரஸ் இந்தப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது என்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பெரும் பங்கு ஆற்ற வேண்டும் என்றும் இளைஞர்கள் இதில் அதிகம் வரும் போதுதான் சிறந்த ஆட்சியை கொடுக்க முடியும் என்று மாநகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன் செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.