25/09/2024
இடியாப்ப சிக்கலில் சிக்க போகிறாரா தோழர் தொல்.திருமாவளவன்
ஆர் எம் பாபு
தோழர் திருமா அவர்களுக்கு
வணக்கம். “இந்தியா முழுவதும் உள்ள ரிசர்வ் தொகுதிகளில் வெற்றி பெற பாசிச பாஜகவை வீழ்த்த தோழர் திருமா தலைமையில் கூட்டியக்கம் துவங்கிட வேண்டும்” https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/43849-2022-06-13-03-20-26 என்று எழுதிய நான் தான் இப்போது இந்த கடிதத்தையும் எழுதுகிறேன்.
பாசிச சக்திகளும் மதவாத சக்திகளும் பல்வேறு விதமான வலைகளை விரித்து உங்களை வீழ்த்த நினைத்த போதெல்லாம் அவர்களோடு எந்தவித சமரசமும் இல்லாமல் போராடி உங்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியை காப்பாற்றி கட்டுக்கோப்பாக நடத்தி வந்தீர்கள் என்பதை நினைத்து பெருமை படுகிறேன்.
ஆனால் சமீப காலமாக குறிப்பாக உங்களது மாநாடுக்கும் பின்னர் அந்த மாநாட்டை நடத்த நிதி உதவி அளித்த ஆதவ அர்ஜுனா ரெட்டி அவர்களது வருகைக்கு பின்னர், அவருக்கு வந்த உடனே துணை பொதுச்செயலாளர் பதவி கொடுத்த பின்னர் பல்வேறு வித குழப்பமான சூழலுக்கு உள்ளாகி இருப்பதை பார்க்க முடிகிறது.
ஆதவ அர்ஜுன ரெட்டி என்பவர் லாட்டரி மார்டின் அவர்களின் மருமகன் என்பது உங்களுக்கு தெரியாதது அல்ல. லாட்டரி மார்டின், அவரது மனைவி இருவருமே பாஜகவில் பொறுப்பில் இருக்கிறார்கள் என்பதுவும், பாஜகவிற்கு தேர்தல் பத்திரம் மூலம் ரூ. 100 கோடி கொடுத்ததுவும், அதற்கு பிரதி உபகாரமாக ஆளுநர் லாட்டரி தடை சட்டத்தில் கையெழுத்து போடாததுவும், லாட்டரி மார்ட்டின் நிறுவனத்திற்கே கோவை – ஷ்ரிடி ரயிலை தாரை வார்த்து கொடுத்து இருப்பதும் தாங்கள் அறிந்ததே.
இதுவரை பாஜகவின் B டீமாக இருந்துகொண்டு, குறிப்பாக உங்களிடம் இருக்கும் தலித் வாக்கு வங்கியை உடைப்பதற்காக களமிறங்கிய இயக்குனர் ரஞ்சித்தின் நீலம் அமைப்பு, டாக்டர் கிருஷ்ணசாமி, ஆகியோர்களின் தோல்விக்கு பின்னர், இறுதியாக உங்களது கட்சியை கபளீகரம் செய்ய பாசிச பாஜகவால் அனுப்பப்பட்டவர் தான் ஆதவ அர்ஜுன ரெட்டி என்பதை தாங்கள் எச்சரிக்கையோடு கையாள வேண்டும். அவர் உங்கள் கட்சியை ஹைஜாக் செய்துவிட்டாரோ என்ற அளவில் பல்வேறு புதிர் விளையாட்டுக்கள் நடந்து கொண்டு இருக்கிறது.
இப்போது புலிவால் பிடித்த கதையாக ஆதவ அர்ஜுன ரெட்டியை உங்கள் கட்சியில் வைத்து இருக்கிறீர்கள். அவரிடம் நன்கொடை பெற்றும் இருக்கிறீர்கள். எதோ காரணத்தினால் அவரை கட்சியை விட்டு நீக்கினால் இது அமலாக்கத்துரையின் PMLA வழக்காக கூட மாறக்கூடும் என்பதால் மிகவும் கவனமாக கையாண்டு, யார் எந்த புற்றிலிருந்து வருகிறார்கள் என்பதை அறிந்து களம் காணுங்கள்.
அருந்ததியர் உள் ஒதுக்கீடுக்கு எதிரான நிலைப்பாடு என்பது சங்கிகளின் நிலைப்பாடு. உங்களோடு தோளோடு துணை நின்று அனைத்து போராட்டங்களிலும் முன் வரிசையில் அமர்ந்து கொண்ட அந்த அருந்ததியர்களுக்கு எதிராக உங்கள் கட்சியை நிறுத்தி இருப்பது ஒரு பக்கம் வருத்தமானது.
உயர் சாதியில் EWS என்ற உள் ஒதுக்கீடு எப்படி இருக்கிறதோ, பிற்பட்ட வகுப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற உள் ஒதுக்கீடு எப்படி இருக்கிறதோ அதே போல பட்டியலினத்தில் மிகவும் பின்தங்கியவர்களுக்கு ஓர் உள் ஒதுக்கீடு என்ற புரிதல் இல்லாத நிலையை நினைத்து நான் வருந்துகிறேன்.
"துணை நடிகர் துணை முதல்வராகலாம்" என்ற வார்த்தைகளில் ஏளனம் அதிகமாக இருக்கிறது. துணை நடிகர் என்பவரும் கூட ஒரு வாக்காளர் தானே. வாக்காளராக இருக்கும் யாரும் தேர்தலில் போட்டியிடலாம். வெற்றி பெற்றால் துணை முதல்வர் அல்ல முதல்வராக கூட ஆகலாமே.
இப்போது மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறீர்கள். அது கூட விஜய் நடத்த இருக்கும் மாநாடு பேசு பொருள் ஆகிவிடாமல் இருப்பதற்காக நீங்கள் நடத்தும் மாநாட்டை பேசு பொருளாக்க முற்பட்டதாக தான் அரசியல் புரிந்தவர்கள் புரிந்து கொண்டார்கள்.
நீங்கள் உங்களது கட்சியானது அமைப்பாக இருந்த காலத்திலிருந்து உங்களோடு துணை நின்று அத்தனை இன்னல்களையும் சுமந்து உங்களோடு பயணிப்பவர்களின் அபிப்பிராயத்தை கேட்டு பயணியுங்கள். நேற்று வந்தவர்களின் நோக்கங்களை புரிந்துகொண்டு எச்சரிக்கை உணர்வுடன் இருக்கவேண்டிய அவசியம் இருக்கிறது.
எண்ணித்துணிக கருமம், துணிந்தபின்
எண்ணுவது என்பது இழுக்கு
நன்றி
ஆர் எம் பாபு
சமூக, அரசியல் இணைய இதழ்