21/05/2026
தமிழக அமைச்சரவையில் சமூக பிரதிநிதித்துவம் குறித்து வெளியாகியுள்ள இந்த பட்டியல், சமூக நீதி என்ற சொல்லின் உண்மையான அர்த்தம் இன்று எவ்வளவு சீரழிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது.
தமிழகத்தில் சுமார் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையுடன் வாழ்ந்து வரும் செங்குந்த கைக்கோள முதலியார் சமூகத்திற்கு, தற்போதைய ஆளும் தமிழக வெற்றிக்கழக அரசு அமைச்சரவையில் ஒரு இடம் கூட வழங்கப்படாதது மிகப்பெரிய அரசியல் அநீதியாகும்.
ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் மட்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், அந்த வேட்பாளர் மக்களின் பேராதரவுடன் அமோக வெற்றி பெற்றும் கூட, அந்த சமூகத்திற்கு அமைச்சரவைப் பொறுப்பில் எந்த அங்கீகாரமும் வழங்கப்படவில்லை என்பது திட்டமிட்ட புறக்கணிப்பாகவே பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபை வரலாற்றில், செங்குந்த கைக்கோள முதலியார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் இடம்பெறாத அமைச்சரவை என்ற அவப்பெயரை தற்போதைய அமைச்சரவை பெற்றுள்ளது.
இது வெறும் ஒரு சமூகத்தின் வேதனை அல்ல.
இது சமூக நீதி என்ற கொள்கைக்கே எதிரான செயலாகும்.
சமூக நீதி என்பது சில சமூகங்களுக்கு மட்டும் அதிகாரம் வழங்கப்படுவது அல்ல.
ஒவ்வொரு சமூகத்திற்கும் அதன் மக்கள் தொகை, பங்களிப்பு, வரலாறு, அரசியல் பங்கு ஆகியவற்றின் அடிப்படையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதே உண்மையான சமூக நீதி.
“எண்ணிக்கை ஏற்ற இடஒதுக்கீடு” மற்றும் “எண்ணிக்கை ஏற்ற அரசியல் பிரதிநிதித்துவம்” என்பதே தமிழ்ச் சமூகத்தின் எதிர்கால அரசியல் திசையாக இருக்க வேண்டும்.
நெசவு, தொழில், வர்த்தகம், கல்வி, தேசபற்று, தமிழ் வளர்ச்சி, பொருளாதாரம் போன்ற பல துறைகளில் தமிழகத்திற்கு அளவிட முடியாத பங்களிப்பை வழங்கிய செங்குந்த கைக்கோள முதலியார் சமூகத்தை தொடர்ந்து அரசியல் அதிகாரத்தில் இருந்து விலக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது.
ஒரு சமூகத்தின் வாக்குகள் மட்டும் தேவையாகி, அதிகாரப் பகிர்வில் அந்த சமூகத்தை மறந்து விடும் அரசியல் இனி நீடிக்க முடியாது.
தமிழ் செம்படைக் கழகம் தெளிவாக கூறுகிறது:
அரசியலில் பங்கேற்பு இல்லாமல் எந்த சமூகத்திற்கும் பாதுகாப்பில்லை.
அதிகாரத்தில் இடமில்லாமல் எந்த சமூகத்திற்கும் மரியாதை இல்லை.
அரசியல் விழிப்புணர்வே சமூகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாகும்.
எனவே செங்குந்த கைக்கோள முதலியார் சமூக இளைஞர்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இனி அரசியல் பிரதிநிதித்துவத்தின் அவசியத்தை உணர்ந்து ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய காலம் வந்துவிட்டது.
சமூகத்தை எண்ணிக்கையில் பயன்படுத்தி, அதிகாரத்தில் புறக்கணிக்கும் அரசியலுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் குரல் கொடுப்போம்.
எங்கள் சமூகத்திற்கு உரிய அரசியல் அங்கீகாரமும், அமைச்சரவை பிரதிநிதித்துவமும் கிடைக்கும் வரை தமிழ் செம்படைக் கழகத்தின் குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.
முத்துவேல் ராஜா
நிறுவனத் தலைவர்
தமிழ் செம்படைக் கழகம்
095979 11062