17/08/2026
சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் தொழில் வளர்ச்சியை எளிதாக்கும் புதிய முன்னெடுப்பு
மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் டாக்டர். வி.கே. ராஜீவ் அவர்கள், இன்று (17.08.2026) சென்னை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில், வெள்ளை வகை (White Category) தொழிற்சாலைகளுக்கான இணையதளம் மற்றும் மணலி–எண்ணூர் மறுசீரமைப்பு மற்றும் புதுப்பிப்பு அமைப்பின் (MERRC) இணையதளத்தை தொடங்கி வைத்தார்.
🔹 வெள்ளை வகை தொழிற்சாலைகளுக்கான இணையதளம்
மிகக் குறைந்த மாசு ஏற்படுத்தும் வெள்ளை வகை தொழிற்சாலைகள், இனி சுய அறிவிப்பு முறையில் இணையவழியாக பதிவு செய்து, இசைவாணைக் கட்டணம் ஏதுமின்றி உடனடி ஒப்புகைச் சான்றிதழைப் பெற்று தொழிலைத் தொடங்கும் வகையில் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் தொழில் நிறுவனங்களின் இணக்கப்பாட்டுச் சுமை குறைக்கப்பட்டு, ‘Ease of Doing Business’ நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்படுகின்றன.
🔹 மணலி–எண்ணூர் MERRC இணையதளம்
மணலி–எண்ணூர் பகுதியில் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட MERRC, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, மாசுக் கட்டுப்பாடு, நீர்நிலைகள் புதுப்பித்தல் மற்றும் சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகிறது.
இந்த நடவடிக்கைகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய பங்குதாரர்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் MERRC இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு | தொழில் வளர்ச்சி | வெளிப்படைத்தன்மை | எளிமையான நிர்வாகம்