17/08/2026
தேனி மாவட்டம் மேகமலை உட்பட 9 ஊராட்சிக்குட்பட்ட 98 கிராமங்களில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் சுமார் 100 ஆண்டுகளாக, 4 தலைமுறைகளுக்கு மேலாக பருத்தி, இலவம்பஞ்சு உட்பட பயிர்களைப் பயிர் செய்து விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார்கள். கிராம விவசாயிகளுக்கு செம்பட்டாவும், வனப்பகுதியில் கால்நடைகளை மேய்ப்பதற்கு புல்வரி அனுமதிச் சீட்டும் வழங்கி இருக்கிறார்கள். தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் இப்பகுதியில் சாலை வசதி, போக்குவரத்து வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி, பள்ளிக்கூடம், சமுதாயக்கூடங்கள், ரேஷன் கடைகள் ஆகியவை செய்துகொடுத்துள்ளார்கள்.
இந்நிலையில் கிராம சபாவில் எவ்வித தீர்மானங்களும் நிறைவேற்றாமலேயே வனத்துறை காப்புக்காடுகள் என அறிவித்தனர். இதனால் வனத்துறையின் கெடுபிடி அதிகமாகி விவசாய விளைபொருள்கள் சந்தைக்கு எடுத்து செல்லக் கூட வனதுறையினர் தடைகள் ஏற்படுத்தப்பட்டதால், பகுதி மக்களிடம் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான வழக்கில் 24.03.2026 அன்று உச்ச நீதிமன்றம் 98 கிராமங்களில் 4,601 விவசாயக் குடும்பங்களையும், 4,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளையும் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு காவல்துறை பயன்படுத்த முடியாது என்று சொன்னால் துணை ராணுவப்படையைக் கூட பயன்படுத்துங்கள் என்று உச்ச நீதிமன்றம் வழிகாட்டியிருக்கிறது. இது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 2006 வன உரிமைச் சட்டம் சுட்டிக்காட்டிய விஷயங்களையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் உச்ச நீதிமன்றம் இப்படிப்பட்ட ஒரு மோசமான தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
இதன் அடிப்படையில் செப்டம்பர் மாதம் ஒன்றன்று உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வரும்போது தமிழக அரசின் சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து மக்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்வதோடு, அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணைநிற்கும் என்பதையும் தெரிவித்து அமைகிறேன். – தோழர் ஆர்.செல்லசுவாமி, எம்.எல்.ஏ., சட்டமன்றக்குழு தலைவர்
More: https://youtube.com/shorts/tr0SUSp