01/11/2015
FREE WI-FI in TUTICORIN....தூத்துக்குடியில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக 5 முக்கிய இடங்களில் இலவச வை பை வசதி செய்யப்படுகிறது.
வரும் நவம்பர் 15ம் தேதி முதல் இந்த சேவை துவக்கப்படுகிறது.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் முக்கிய இடங்களில் வை பை வசதி செய்து தரமுடிவு செய்யப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க இலவசமாக இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.
முதற்கட்டமாக தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் கல்லூரி அருகே, காமராஜ் கல்லூரி அருகே, வஉசி கல்லூரி அருகே, பழைய பஸ் நிலையம், பனிமயமாதா ஆலயம் ஆகிய பகுதிகளில் வைபை மோடங்கள் நிறுவப்படுகின்றன. இதற்கான பணியை ஒரு தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக அந்த பகுதிகளில் ஒரு கம்ப்யூட்டர் அன் லிமிடெட் வைபை மோடத்துடன் நிறுவப்படுகிறது.
இதற்காக அங்கு ஒரு கேபின்கள் அமைக்கப்பட்டு அங்கு அந்நிறுவன பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் இருப்பர். முழுக்க முழுக்க மக்களுக்கு இந்த வைபை சேவை இலவசமாக அளிக்கப்படுகிறது. இதற்கான வைபை யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டு ஆகியவை அந்தந்த பகுதிகளில் தெளிவாக வைக்கப்படும். இதற்கான செலவுகளை அந்நிறுவனமே ஏற்றுக்கொள்வதால் பொதுமக்கள் பயன்பாட்டில் இருக்கும்போது சில ஆன்லைன் விளம்பரங்கள் மற்றும் வரிசெய்திகள் அதனை பயன்படுத்துபவர்கள் மொபைல்களில் உலாவரும் விதமாக தயார் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேயர் அந்தோணிகிரேஸ் கூறுகையில்:பொதுமக்கள் இதன் மூலம் ஆன்லைன் சேவைகளை பயன்படுத்த முடியும். மாணவ மாணவிகள் கல்விக்காக இதனை பயன்படுத்தமுடியும் வகையில் இந்த இலவச சேவை வழங்கப்படுகிறது. ஒரே நேரத்தில் ஒரு பகுதியில் 100 பேர் இந்த வசதியை பயன்படுத்த முடியும். முதலில் 3 ஜி வேகத்திலும் தொடர்ந்து 4 ஜி வேகத்திற்கும் இந்த சேவை விரிவு செய்யப்படும்.முதலில் 5 இடங்களில் இச்சேவை 5 முக்கிய மக்கள் கூடும் பகுதிகளில் துவக்கப்பட்டாலும் அடுத்த கட்டமாக மேலும் 10 இடங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்த இலவச வை பை வசதி மும்பை, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நிகராகவும், தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக தூத்துக்குடியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 15ம் தேதி முதல் இந்த சேவை துவக்கப்படுகிறது என்றார்...