25/07/2026
*E.R.Eswaran Ex MLA (KMDK) General Secretary : மாதம் 4000 ரூபாய் கிடைக்கும் என்று வாக்களித்த வேலையில்லா இளைஞர்களுடைய எதிர்பார்ப்பை வரும் நிதிநிலை அறிக்கையில் அரசு பூர்த்தி செய்ய வேண்டும்.*
தமிழக வெற்றிக் கழகம் தன் தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா இளைஞர்கள் அனைவருக்கும் மாதம் தோறும் 4000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. அதை நம்பி லட்சக்கணக்கான இளைஞர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களித்து திரு விஜய் அவர்களை முதலமைச்சராக ஆக்கியிருக்கிறார்கள். வேலையில்லாத இளைஞர்கள் தவறான வழியில் பணம் சம்பாதிப்பதை தடுக்கவும், வேலை தேடுவதற்கு தேவையான நிதியாகவும் அரசு கொடுக்கப் போகிற இந்த 4000 ரூபாய் பயன்படும். தமிழகத்தில் புதிய முதலீடுகள் எதிர்பார்த்த அளவில் வராத சூழலிலும், அரசு பணிகளில் புதிதாக ஆள் சேர்ப்பதற்கான முயற்சிகள் இல்லாத சூழலிலும் வேலையில்லாத இளைஞர்களுக்கு இந்த 4000 ரூபாய் மிகவும் உதவியாக இருக்கும். பல குடும்பங்களில் வேலை இல்லாத இளைஞர்கள் பெற்றோர்களிடத்தில் பணம் கேட்பதற்கு சங்கடப்பட்டு மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். வருமானம் இல்லாத இளைஞர்கள் தன்மானத்தோடு தமிழகத்தில் வாழ இது பெரும் உதவியாக இருக்கும். தேர்தலிலே கொடுக்கப்பட்ட வாக்குறுதியை தான் இளைஞர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தமிழகத்தில் இருக்கின்ற இளைஞர்கள் ஒற்றுமைப்பட்டு முதலமைச்சரிடத்திலே கோரிக்கை வைப்பதற்கு முன்பாக அரசு இந்த திட்டத்தை அறிவித்து நிறைவேற்றினால் சங்கடங்கள் இல்லாமல் இருக்கும். ஆகஸ்ட் 5ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கின்ற தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் முத்தாய்ப்பான திட்டமாக வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம்தோறும் 4000 ரூபாய் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டால் தேர்தலில் வாக்களித்து ஆட்சியில் அமர வைத்த இளைஞர்கள் வரவேற்று மகிழ்வார்கள். நிதிநிலையை காரணம் காட்டி அரசு தவிர்க்காமல் இந்த திட்டத்தை தமிழகத்தின் எதிர்கால தலைமுறைக்காக செயல்படுத்த வேண்டும்.