15/08/2026
வட்டமலை அணை: 50 ஆண்டுகால வரலாறும், அதன் மறுமலர்ச்சிக்கான செயல்திட்டமும்
வரலாறு:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வட்டமலை அணை என்று சுருக்கமாக அழைக்கப்படும் வட்டமலை கரை ஓடை அணை 1970-களின் பிற்பகுதியில், பரம்பிக்குளம்–ஆழியாறு திட்டத்தின் (PAP) கசிவு நீரைச் சேமிப்பதற்காக கட்டப்பட்டது. இதன் ஆயக்கட்டு 6,043 ஏக்கர்; கொள்ளளவு 268 மில்லியன் கனஅடி (MCFT). இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட உப்பாறு அணையைப் போலவே, வட்டமலை அணையும் 1980-களின் பிற்பகுதி வரை நிரம்பி, விவசாயிகளுக்குச் சிறப்பாகப் பயன்பட்டு வந்தது.
1990-களின் தொடக்கத்தில் பி.ஏ.பி. நீர் விநியோக முறை மறுசீரமைக்கப்பட்டபோது, இந்த இரண்டு அணைகளையும் சார்ந்துள்ள விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்காக தமிழ்நாடு அரசு இரண்டு முக்கிய அரசாணைகளைப் பிறப்பித்தது.
1. ஜூன் 01, 1994 தேதியிட்ட அரசாணை எண் 506, பி.ஏ.பி. திட்டத்தில் உபரி நீர் கிடைக்கும் போதெல்லாம், பி.ஏ.பி. பிரதான கால்வாயில் உள்ள அரசூர் வெளிப்போக்கியிலிருந்து (Arasur Regulator) உப்பாறு அணைக்கு அதிகபட்சம் 300 MCFT தண்ணீர் வழங்கப்படும் என்று உறுதியளித்தது.
2. பிப்ரவரி 03, 1995 தேதியிட்ட அரசாணை எண் 84, பி.ஏ.பி. அமைப்பில் உபரி நீர் கிடைக்கும் போதெல்லாம், கல்லிப்பாளையம் வெளிப்போக்கியிலிருந்து (Kallipalayam Regulator) வட்டமலை அணைக்கு அதிகபட்சம் 240 MCFT தண்ணீர் வழங்கப்படும் என்று உறுதியளித்தது. மேலும், உப்பாறு அணைக்கு அதன் 300 MCFT உரிமையான நீர் வழங்கப்பட்ட பின்னரே வட்டமலை அணைக்கான இந்த நீர் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அந்த அரசாணை தெளிவுபடுத்தியது.
இந்த இரண்டு அரசாணைகளும், அந்தந்த அரசாணைகளின்படி ஒதுக்கப்படும் உபரி நீரைத் தவிர, இந்த இரண்டு அணைகளுக்கும் பி.ஏ.பி. நீரில் வேறு எந்த உரிமையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளன.
துரதிர்ஷ்டவசமாக கடந்த முப்பது ஆண்டுகளில் நான்கு முறை மட்டுமே உபரி நீர் கிடைத்துள்ளது. உபரி நீரைப் பெற உயர்நீதி மன்றத்தின் உதவியையும் நாட வேண்டி இருந்தது.
மறுமலர்ச்சி: வட்டமலை அணையை உயிர்ப்பிக்க ஐந்து வழிகள்
1. ஆனைமலையாறு–நல்லாறு திட்டத்தைச் செயல்படுத்துதல்
நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள இத்திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் ஆண்டுக்கு 8.5 டிஎம்சி நீர் கிடைக்கும்.
2. பரம்பிக்குளம்–ஆழியாறு (பிஏபி) திட்டத்தை செம்மைப்படுத்துதல்
பிஏபி திட்டத்தின் நீர் மேலாண்மையை மேம்படுத்துவதன் மூலமும், வீட்டு மனைகளாகவும், தொழிற்சாலைகளாகவும் மாற்றப்பட்ட பாசனப் பகுதிகளை ஆயக்கட்டிலிருந்து நீக்குவதன் மூலமும், நீர்த்திருட்டைத் தடுப்பதன் மூலமும் ஆண்டுக்கு மூன்று டிஎம்சி வரை கூடுதல் நீர் கிடைக்கும்.
மேலே கூறிய இரண்டு நடவடிக்கைகளின் மூலம் கிடைக்கும் உபரி நீரை உப்பாறு அணைக்கும் வட்டமலை அணைக்கும் வழங்க முடியும்.
3. நீரேற்றுத் திட்டத்தின் மூலம் வட்டமலை அணையை அமராவதி ஆற்றுடன் இணைத்தல்
அமராவதி ஆற்றிலிருந்து ஆண்டுக்கு சுமார் நான்கு டிஎம்சி நீர் கடலில் கலக்கிறது. அமராவதி ஆற்றிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்திலும், 30 அடி உயரத்திலும், கால் டிஎம்சி கொள்ளளவும் கொண்ட வட்டமலை அணையை நீரேற்றுத் திட்டத்தின் மூலம் எளிதில் இணைக்க முடியும். மேலும், காற்று மற்றும் சூரிய ஒளியின் மூலம் தேவைக்குமேல் மின்சாரம் உற்பத்தி செய்ய அணைப் பகுதியில் போதிய இடவசதியும் உள்ளது.
4. உயிர் நீர் வழங்குதல்
மேலே கூறிய மூன்று திட்டங்களின் மூலம் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை, நவம்பர் 2021 உயர் நீதிமன்ற உத்தரவின்படி வட்டமலை அணைக்கு பிஏபி திட்டத்திலிருந்து உயிர் நீர் வழங்க வேண்டும்.
5. சீமைக்கருவேல மரங்களை அகற்றி அணையைச் சுத்தம் செய்தல்
சீமைக் கருவேல மரங்களால் வட்டமலை அணை புதர் மண்டிக் கிடக்கிறது. இதனால் கொலை, கொள்ளை போன்ற சட்ட விரோதச் செயல்களும் அணைப் பகுதியில் அவ்வப்போது நடக்கின்றன.
பெரிதாக வளர்ந்துள்ள இம்மரங்களை ஏலத்தில் விட்டால் அரசுக்கு கணிசமான வருவாயும் கிடைக்கும். அணையும் சுத்தமாகும்.
அணை தூய்மைப்படுத்தப் பட்ட பின்னரே வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும். இதனால் மண் எடுப்பதும் சுலபம். எடுக்கும் மண்ணும் சுத்தமாக இருக்கும். திறந்த வெளியாக இருப்பதால் மண் திருட்டும் தடுக்கப்படும்.