Tirupur News

Tirupur News Hello Tirupureans, this page is all about the hot news and happenings in Tirupur

05/09/2017
16/02/2017
19/01/2016

எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா: 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் பல்வேறு இடங்களில் மாலை அணிவித்து மரியாதை

திருப்பூர் மாவட்ட மாநகர் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை அணிவித்து மரியாதை
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழாவையொட்டி, திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். சிலை மற்றும் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

அதன்படி திருப்பூர் பழைய பஸ்நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் சு.குணசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், பல்லடம் எம்.எல்.ஏ.பரமசிவம், அவினாசி எம்.எல்.ஏ. கருப்பசாமி ஆகியோரது முன்னிலையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அ.தி.மு.க.கட்சி அலுவலகத்தில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர். அதன் பின்னர் அங்கிருந்து அனைவரும் ஊர்வலமாக நடந்து சென்று பார்க் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலை இருக்கும் இடத்திற்கு வந்தடைந்தனர். அங்கு எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு பாலாபிஷேகம் செய்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். திருவுருவ படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

10 ஆயிரம் பேருக்கு அன்னதானம்
எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி திருப்பூர் மாவட்ட, மாநகர் அ.தி.மு.க. மற்றும் எம்.ஜி.ஆர். மன்ற கழகம் சார்பில் திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அன்னதான நிகழ்ச்சியை துணைமேயர் குணசேகரன் தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் கரைப்புதூர் நடராஜன் செய்திருந்தார். இதேபோல் ஈஸ்வரன் கோவிலிலும் அ.தி.மு.க. நிர்வாகி சிட்டி பழனிசாமி ஏற்பாட்டில் அன்னதானம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

திருப்பூர் மாநகராட்சி 31–வது வார்டுக்குட்பட்ட வாலிபாளையம், பெரியார் நகர், யூனியன் மில்ரோடு ஆகிய இடங்களிலும் எம்.ஜி.ஆர் உருவபடங்களுக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர். அதைதொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்களுக்கு துணை மேயர் ஆயிரம் லிட்டர் பால் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் பழனிசாமி, நிர்வாகிகள் கருவம்பாளையம் மணி, வி.ராதாகிருஷ்ணன், எம்.கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, சேவூர் வேலுச்சாமி, மார்க்கெட் சக்திவேல், கீதா ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினத்தந்தி

19/01/2016

லாரி வேலை நிறுத்த முடிவில் சமரச தீர்வு காண அரசு முன்வரவேண்டும் திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினர் எதிர்பார்ப்பு

சுங்க கட்டணத்தை ரத்துசெய்யக்கோரி மீண்டும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் நடத்துவது குறித்த முடிவில் சமரச தீர்வு காண அரசு முன்வர வேண்டும் என்று திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

லாரி வேலை நிறுத்த அறிவிப்பு
சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுமுழுவதும் உள்ள லாரி உரிமையாளர்கள் கடந்த ஒரு ஆண்டு காலமாக போராடி வருகின்றனர். இதற்கான வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட லாரி உரிமையாளர்களை மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்து சமாதானப்படுத்தியது. இருப்பினும் இன்னும் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை. கடந்த அக்டோபரில் நடந்த நாடு தழுவிய லாரி வேலைநிறுத்தத்தின் போது சுங்க கட்டணங்களை ரத்து செய்து ஆண்டுக்கு ஒருமுறை கட்டணம் செலுத்துவது குறித்து டிசம்பரில் அறிவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.

ஆனால் இதுவரை அதற்கான அறிவிப்பு வரவில்லை. இந்த பிரச்சினை குறித்து வரும் 30, 31–ந் தேதிகளில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெறும் ஆல் இந்தியா மோட்டார் டிரான்ஸ்போர்ட்டர் காங்கிரசின் பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். அப்போது நாடு தழுவிய அளவில் லாரி வேலைநிறுத்த அறிவிப்பு செய்வது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று சுங்க கட்டண குழு தலைவர் சண்முகப்பா தெரிவித்துள்ளார்.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் வேலை நிறுத்த முடிவு எட்டப்பட்டால் திருப்பூர் பின்னலாடை தொழில் பாதிப்படையும் என்று தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து திருப்பூர் சிஸ்மா சங்கத்தின் பொதுச்செயலாளர் பாபுஜி கூறியதாவது:–

சமரச தீர்வுக்கு முன்வரவேண்டும்
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடி மையங்கள் மூலம் ரூ.1,600 கோடி வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது. இதை பரிசீலித்து ஆண்டுக்கு ஒருமுறை கட்டணம் கட்ட வழிவகை செய்தால் லாரி உரிமையாளர்கள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒப்பந்தம் முடிந்தும் காலாவதியான சுங்கசாவடிகளில் கட்டணம் வசூல் செய்வதாக கூறப்படுகிறது. அவைகளை கண்டறிந்து உடனடியாக அகற்ற வேண்டும். சுங்க சாவடிகளில் லாரிகளை நிறுத்தி செல்லும் போது நேரம் வீணாவதுடன், சரக்கு குறித்த நேரத்தில் செல்லாமல் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இதனால் திருப்பூரில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லும் சரக்குகள் தேக்கமடைய வாய்ப்பு உள்ளது. இதனால் லாரிகள் வேலை நிறுத்தத்திற்கு வழிவகை செய்யாமல் லாரி உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமரச தீர்வுக்கான நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும். இதன் மூலம் திருப்பூர் பின்னலாடை தொழிலும், வர்த்தகமும் பாதுகாக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினத்தந்தி

19/01/2016

சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில்
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதனால் சிவன்மலை கோவிலில் முக்கிய நாட்களில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெறும். இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா வருகிற 24–ந்தேதி நடக்கிறது.

அதன்படி சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 6 மணிக்கு மலையடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் மலை கோவிலுக்கு அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மயில்வாகன அபிஷேகம் நடைபெற்றது. காலை 11 மணிக்கு விநாயகர் வழிபாடும், அதன்பின்னர் முருகன் கோவில் சன்னதியில் உள்ள கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தேரோட்டம்
இதையடுத்து மதியம் 2 மணிக்கு சாமி, மலையடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளல் பூஜை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தினமும் காலை 9 மணிக்கு காலசாந்தி, கோவில் மற்றும் பல்வேறு சமூக மக்களின் சார்பில் மண்டப கட்டளை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 24–ந்தேதி நடக்கிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு மகாஅபிஷேகம் நடக்கிறது. 6 மணிக்கு சாமி ரதத்திற்கு எழுந்தருளுகிறார். மாலை 4 மணிக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் முன்னிலையில் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

வருகிற 25–ந் தேதி தேர் மலையை வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 26–ந்தேதி தேர் நிலையை அடைகிறது. இந்த 3 நாட்களும் அன்னதானம், பக்தி சொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மேலும் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்துகிறார்கள். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பசவராஜன், உதவி ஆணையர் ஹர்சினி மற்றும் அலுவலக ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

ஆர்.டி.ஓ. தலைமையில் ஆலோசனை கூட்டம்
சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூச திருவிழாவிற்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று மாலை கோவில் வளாகத்தில் நடந்தது. தாராபுரம் ஆர்.டி.ஓ. சரவணமூர்த்தி தலைமை தாங்கினார். என்.எஸ்.என்.நடராஜ் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். கோவில் செயல் அலுவலர் பசவராஜன் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் தேரோட்டம் நடைபெறும் 24, 25, 26 ஆகிய தேதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர், மின்சாரம், சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தேரோட்டம் நடைபெறும் 3 நாட்களுக்கும் தடையில்லா மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்க வேண்டும், 200–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும், மலையை சுற்றி 20 இடங்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் என தனித்தனியாக கழிப்பிட வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும், கோவில் வளாகத்தில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட வேண்டும், கூடுதல் அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட வேண்டும், விழாவிற்காக அமைக்கப்படும் கடைகள் தேர்ப்பாதையில் இருந்து 5 அடி தள்ளியே அமைக்கப்பட வேண்டும், இரவு 11 மணிக்கு மேல் கோவில் வளாகத்தில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட வேண்டும் என்பன போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன.

மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் மலையிலிருந்து அடிவாரம் வரை 2 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. கூடுதலாக 3 பஸ்கள் வீதம் மொத்தம் 5 பஸ்கள் இயக்கப்படும். சிவன்மலை அடிவாரத்தில் உள்ள அரசு மதுபானக்கடையை தேரோட்டம் நடைபெறும் 3 நாட்களுக்கும் மூடிவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என ஆர்.டி.ஓ. தெரிவித்தார்.

கூட்டத்தில் தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) ஜரினாபேகம், தாசில்தார் ராஜகோபால், உதவி ஆணையர் ஹர்சினி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜமாணிக்கம், அரிகரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மகாலிங்கம், தனசேகரன் உள்பட பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

தினத்தந்தி

19/01/2016

கலெக்டர் அலுவலகத்தில் பொது மக்கள் திடீர் தர்ணா

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சிலர் திடீரென்று தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்ணா போராட்டம்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு மங்கலம் ஆதி திராவிடர் காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மனு கொடுக்க வந்தனர். அவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கத்துக்கு செல்லும் வழியில் திடீரென்று தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை தாக்கியவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினார்கள். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.

பள்ளி மாற்று சான்றிதழ்
திருப்பூர் எம்.எஸ்.நகர் செல்வலட்சுமி நகரை சேர்ந்த சுரேஷ்பாபுவின் மனைவி மாலதி தனது மகன் சூரியாவுடன், கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், தனது மகன் திருப்பூர் செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10–ம் வகுப்பு வரை படித்துள்ளார். விளையாட்டு போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்து ஏராளமான பதக்கங்களை பெற்றுள்ளான்.

இந்த நிலையில் பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி பள்ளி நிர்வாகம் எனது மகனின், மாற்று சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழை வழங்க மறுக்கிறது. எனவே அவற்றை பெற்றுத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர்.

முன்னாள் போலீஸ் அதிகாரி
அலகுமலை ஊராட்சி ராமம்பாளையம் மற்றும் புதுப்பாளையம் பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில், அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 118 பேர் படித்து வருகிறார்கள். அவர்கள் விளையாட மைதானம் எதுவும் இல்லை. எனவே விளையாட்டு மைதானம் அமைக்க இடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

குன்னத்தூர் வேலம்பாளையம் பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 80 நெசவாளர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் குலதெய்வமான காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் முன்னாள் போலீஸ் அதிகாரி வெங்கடாசலம் என்பவர் படைக்கலம் எடுத்துவந்தார். இதனால் அவரை வாரிசாக நியமித்து அஞ்சல் அலுவலகத்தில் வைப்புதொகை செலுத்திஇருந்தோம். மேலும் கோவிலுக்கு சொந்தமான வெள்ளிநகைகள் அவருடைய பாதுகாப்பில் இருந்தது. தற்போது குடும்ப பிரச்சினை காரணமாக படைக்கலம் எடுக்கும் பொறுப்பில் இருந்து விலகிக்கொண்ட அவர், தன்வசம் உள்ள கோவில் நகைகளையும், ரூ.1 லட்சம் ஊர் பணத்தையும் கொடுக்க மறுக்கிறார். எனவே அவற்றை பெற்று கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதுபோல், பல்லடத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி தம்பதியான கணேஷ்–ஸ்வப்னா ஆகியோர், கலெக்டர் அலுவலகத்தில் ஜெராக்ஸ் கடை வைத்துக்கொள்ள அனுமதி கேட்டு மனு கொடுத்தனர். மேலும், திருப்பூர் பாண்டியன்நகர் மற்றும் அங்கேரிப்பாளையம் அரசு பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 படித்த மாணவர்கள் கொடுத்த மனுவில், இதுவரை அரசால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை ரூ.6 ஆயிரம் வரவில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட பள்ளியில் கேட்டால், எங்களை அலைக்கழிப்பு செய்கிறார்கள். எனவே எங்களுக்கு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

தினத்தந்தி

19/01/2016

காங்கேயம் இன மாடுகளை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் விவசாயிகள் கூட்டமைப்பினர் கோரிக்கை

காங்கேயம் இன மாடுகளை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாய சங்கங்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆலோசனை கூட்டம்
தாராபுரத்தில் விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் செ.நல்லசாமி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

தாராபுரம் அருகே உள்ள நாரணாபுரத்தை சேர்ந்த விவசாயி மணி என்பவரது வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளையர்கள் புகுந்து, அவரது குடும்பத்தினரை தாக்கிவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் கண்டனத்திற்கு உரியது. போலீசார் விவசாயிகளுக்கு போதிய பாதுகாப்பு அளிப்பதோடு, விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் உள்ள காங்கேயம் இன மாடுகள் மற்ற மாடுகளை விட உழைப்பில் சிறந்த மாடுகள். இந்த மாடுகளை தற்போது விவசாயிகள் விவசாயத்திற்காக பயன்படுத்துவதில்லை.

காங்கேயம் மாடுகளை காப்பாற்ற வேண்டும்
இத்தகைய மாடுகள் ரேக்ளா, ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற வீர விளையாட்டுகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விளையாட்டுகளில் மாடுகள் எந்த வகையிலும் துன்புறுத்தப்படுவதில்லை. பாரம்பரியமான இந்த விளையாட்டுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்தால் மட்டுமே காங்கேயம் இன மாடுகளை அழிவிலிருந்து காப்பாற்ற முடியும்.

எனவே ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

‘கள்’ இறக்கும் போராட்டம்
பூர்ண மதுவிலக்கை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளார்கள். பூர்ண மதுவிலக்கில் ‘கள்’ சேர்க்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை காங்கிரஸ் கட்சிக்காரர்கள் விளக்க வேண்டும். ‘கள்’ என்பது ஒரு உணவு பொருள்.

எனவே அதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என ‘கள்’ இயக்கத்தின் சார்பில் தொடர்ந்து போராடி வருகிறோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 21–ந் தேதி தமிழகம் முழுவதும் தென்னை மற்றும் பனை மரங்களிலிருந்து ‘கள்’ இறக்கி, சந்தைப்படுத்தும் போராட்டத்தை நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினத்தந்தி

19/01/2016

திருப்பூரின் புதிய போலீஸ் கமிஷனர். சவால்களை வெல்வாரா? பிரச்னைகளுக்கு தீர்வு காண எதிர்பார்ப்பு

திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக, மஞ்சுநாதா நேற்று பொறுப்பேற்றார். நகரில் ஏற்படும் போக்குவரத்து பிரச்னை, பெருகும் குற்றச்சம்பவங்கள், அரசியல் நெருக்கடிகளை தாண்டி, பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தள்ளது.

திருப்பூர் மாநகர முதல் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்ட செந்தாமரைக்கண்ணன், பல புதிய முயற்சிகளை மேற்கொண்டார். டூவீலர்களில் செல்வோர், "ஹெல்மெட்' அணிய வேண்டும் என்ற உத்தரவு, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அடுத்து வந்த கணேசமூர்த்தி, சில நாட்களே பணியாற்றினார்.
கமிஷனரகம் ஐ.ஜி., அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டு, சேஷசாய் நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்ற போது, "ஹெல்மெட்' விவகாரத்தில், மென்மையான போக்கு கடைப்பிடிக்கப்பட்டது. கோர்ட் உத்தரவையடுத்து, தீவிரமாக செயல்படுத்த உத்தரவிட்டார். எளிமையான அணுகுமுறையுடன் செயல்பட்டதோடு, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல், கவனமாக இருந்தார். அனைத்து தரப்பு அமைப்புகள் மற்றும் அரசு துறைகளுடன் இணக்கமாக செயல்பட்டதால், இவரது பதவி காலத்தில், பெரிய அளவில் பிரச்னை ஏற்படவில்லை. சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சென்னைக்கு மாற்றப்பட்டதால், வடக்கு மண்டல ஐ.ஜி., மஞ்சுநாதா திருப்பூருக்கு நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றார். இவர், ஏராளமான சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.
பற்றாக்குறை போலீஸ்: திருப்பூர் மாநகர போலீஸில், 900 பேர் பணியாற்ற வேண்டும்; 600 பேரே உள்ளனர். போக்குவரத்து உதவி கமிஷனர் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது பணியில் உள்ள இரு இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி., பதவிக்காக காத்திருக்கின்றனர். குற்றப்பிரிவை பொறுத்தவரை, குற்ற வழக்கு விசாரணை மற்றும் கண்டுபிடிப்பு பணி, சிறப்பு அணியில் கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும். நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை துரிதமாக கண்டறிய வேண்டும்.
புதிய பிரிவுகள் தேவை: குற்ற நிகழ்வுகள் அதிகரித்து வருவதால், பல்வேறு முக்கிய பிரிவுகள் தேவையாக உள்ளன. மோப்ப நாய் பிரிவு, வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு, உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, கைரேகை மற்றும் தடயவியல் பிரிவு, "சைபர் கிரைம்' உள்ளிட்டவை, திருப்பூரில் இல்லை.
மாநகர போலீஸ் துவங்கப்பட்டதும், நவீன காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது; இதற்கான எந்த நடவடிக்கையும், இதுவரை எடுக்கப்படவில்லை. வெடிகுண்டு மிரட்டல் விடும் நபர்களின் போன்களை கூட கண்டறிய முடியாத நிலையில், மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறை உள்ளது.
கண்காணிப்பு அறை: நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் சிக்னல் பகுதி கேமராக்களின்
பதிவுகளை கண்காணிக்க, மாநகராட்சி சந்திப்பில், கண்காணிப்பு அறை அமைக்க திட்டமிடப்பட்டு, தீபாவளிக்கு முன் துவங்கப்பட்டது; இன்று வரை முடியாமல் கிடப்பில் உள்ளது.

வெளிநாட்டினர் பிரச்னை: சுற்றுலா மற்றும் மருத்துவ விசாவில் திருப்பூர் வரும் வெளிநாட்டினர் பலர், குறிப்பாக நைஜீரியர்கள், நிரந்தரமாக இங்கேயே தங்கி விடுகின்றனர். இவர்களில் சிலர், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக, புகார் உள்ளது. அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. பெரும்பாலானோர் வசிப்பிடத்தை மாற்றிக் கொண்டு, நகருக்குள் நடமாடுகின்றனர். 2,000க்கும் மேற்பட்ட நைஜீரியர்கள் உள்ள திருப்பூரில், 100க்கும் குறைவானவர்ளே, தங்களது விவரங்களை, போலீசில் பதிவு செய்துள்ளனர்.
போலீஸ் இளைஞர் படை: போலீஸ் இளைஞர் படைக்கு, தினமும் எட்டு மணி நேர வேலை என்ற அடிப்படையில்
சேர்க்கப்பட்டனர். டிரைவர், தபால் பணி, நிலைய அலுவலக உதவி போன்ற பணிகளுக்கு அமர்த்தப்பட்ட இளைஞர் படையினர், பெரும்பாலும் இரவு பணி, ரோந்து பணி செய்கின்றனர். சிலர், 24 மணி நேரமும் பணியாற்றுவதாக புலம்புகின்றனர். பொதுமக்களுடன் இணக்கமாக பழகத்தெரியாமல், இவர்களில் சிலரது நடவடிக்கையால், ஆங்காங்கே சில பிரச்னைகளும் ஏற்படுகின்றன.
செயின் பறிப்பு: செயின் பறிப்பு தடுப்புக்குழு போலீசார், ரோந்து பணியில் இருந்தாலும், வழிப்பறி சம்பவங்கள், வாகன திருட்டுகள், இரவு மற்றும் பகல் நேரங்களில் வீடு புகுந்து திருடும் சம்பவங்கள் தொடர்கின்றன. போலீஸ் போல் நடித்து, அப்பாவிகளிடம் நகை பறிப்பதும் தொடர்கிறது.
எல்லை பிரச்னை: திருப்பூர் மாநகராட்சி பகுதியை எல்லையாக கொண்டு, கமிஷனரகம் அமைக்கப்பட்டது. அனுப்பர்பாளையம் போலீஸ் எல்லை, பூண்டி பேரூராட்சி வரை உள்ளது. அதை அவிநாசி போலீஸ் ஸ்டேஷனோடு இணைக்க வேண்டும் அல்லது, புது ஸ்டேஷன் ஏற்படுத்த வேண்டும். வடக்கு போலீஸ் ஸ்டேஷன் எல்லையில், எம்.எஸ்., நகரில் "அவுட் போஸ்ட்' அல்லது புது ஸ்டேஷன் அமைக்க வேண்டும்.
தொழிலாளர் விவரம்: தொழில் வளர்ச்சி காரணமாக வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்தும், தினமும் ஏராளமானோர் திருப்பூர் வருகின்றனர். குற்றம் மற்றும் அசம்பாவிதம் ஏற்படும்போது, அவர்கள் குறித்த விவரம் பெறுவதில் சிரமம் ஏற்பட்டு, போலீசார் திணறுகின்றனர். இதை தவிர்க்க, அனைத்து குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றுவோர் குறித்த விவரங்களை பெறும் திட்டம் துவங்கப்பட்டது; இத்திட்டப்பணி, 20 சதவீதமே நடந்துள்ளது.

புது கமிஷனர் தீர்ப்பாரா? ஆளும்கட்சி மாநகராட்சி கவுன்சிலர் "காட்டன்' முத்து கொலை நடந்து, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை எந்த துப்பும் இல்லை. இரவு நேர கடைகள் நடத்துவதில் உள்ள பிரச்னை; ஆளும்கட்சியினர் ஆசியுடன் நடக்கும் ரகசிய மது விற்பனை; கட்டப்பஞ்சாயத்து; கஞ்சா, திருட்டு "சிடி', லாட்டரி விற்பனை; தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம்; போலீசாருக்கு புத்துணர்வு அளிக்கும் முகாம்; பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்
பகுதிகளில் இரவில் தொடரும் சமூக விரோத கும்பல்களின் அட்டகாசங்கள், என, திருப்பூர் மாநகரின் அவலங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இப்பிரச்னைகளுக்கு புது கமிஷனர் தீர்வு காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, மாநகர மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

"குற்றம் தடுக்க சிறப்பு கவனம்'
போலீஸ் கமிஷனர் மஞ்சுநாதா கூறியதாவது: திருப்பூரில் முக்கிய பிரச்னையாக உள்ள போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும். "டிராபிக் வார்டன்' பிரிவில், மேலும், 100 பேர் நியமிக்கப்படுவர். திருப்பூர், வளர்ச்சி பெற்ற தொழில் நகரம்; பொருளாதார பரிவர்த்தனை மிகுந்த பகுதி; மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. இதனால், குற்றச்செயல்களும் அதிகரிக்கின்றன. இவற்றை தடுக்க, கண்காணிப்பு மற்றும் ரோந்து பணி முழுமையாக நடத்தப்படும். தற்போதுள்ள இளைஞர் காவல் படையினர், போலீசாக தேர்வு பெற்றுள்ளனர். பயிற்சிக்குபின், ஸ்டேஷனில் நியமிக்கப்பட உள்ளனர். எனவே, போலீஸ் பற்றாக்குறைக்கு தீர்வு ஏற்படும்.
அதிகளவில் பெண் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களை பாதுகாப்பதோடு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கும் வகையில், திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதுபோன்ற குற்றங்கள் மீது, சிறப்பு கவனம் செலுத்தி, துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காணாமல் போகும் நபர்கள்; தற்கொலை சம்பவங்கள் குறித்து, தனி கவனம் செலுத்தப்படும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, தன்னம்பிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர்

19/01/2016

சீன ஆடைகளின் ஆதிக்கத்தால்...சிக்கலாகும்! உள்நாட்டு வர்த்தகம் சரிய வாய்ப்பு

"சீன ஆடைகளின் ஆதிக்கத்தால், நடப்பு நிதியாண்டில், உள்நாட்டு பின்னலாடை வர்த்தக மதிப்பு, 8,000 கோடி ரூபாயாக சரிய வாய்ப்பிருக்கிறது. அதனால், எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்' என, தொழில் துறையினர் தெரிவித்தனர்.

திருப்பூரில், உள்நாட்டு, ஏற்றுமதி பின்னலாடை நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமின்றி, சில நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்களும், வெளிமாநில ஆடை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. துவக்கத்தில், ஏற்றுமதி ஆடை வர்த்தகத்தில் மட்டுமே, திருப்பூருக்கு போட்டியாக, சீனா இருந்தது. தற்போது, உள்நாட்டு ஆடை வர்த்தகத்திலும், சவாலை அளித்து வருகிறது.

குறைந்த செலவில் ஆடை உற்பத்தி செய்யும் சீனா, வங்கதேசம் வழியாக, வரியினங்களின்றி, மும்பை, டில்லி போன்ற மிகப்பெரிய ஜவுளி வர்த்தக நகரங்களுக்கு, ஆடைகளை இறக்குமதி செய்கிறது. அதிகபட்சம், 25 சதவீதம் வரை விலை குறைவாக கிடைப்பதால், வெளிமாநில வர்த்தகர்கள், சீன ஆடைகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இது, திருப்பூர் நிறுவனங்களுக்கு, பெரும் வர்த்தக இழப்பை ஏற்படுத்துகிறது.

கடந்த நிதியாண்டில், உள்நாட்டு ஆடை வர்த்தக மதிப்பு, 10 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியது. சீன ஆடைகள் வருகையால், நடப்பு நிதியாண்டு இறுதியில், வர்த்தக மதிப்பு, 8,000 ஆயிரம் கோடி அளவில் மட்டுமே இருக்கும் என, இத்துறையினர் கவலை அடைந்துள்ளனர்.
"டீமா' தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், ""திருப்பூரில் உள்ள நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்கள், உள்நாட்டு ஆடை உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகின்றன. சீன ஆடைகளின் ஆதிக்கத்தால், தற்போது உள்நாட்டு ஆடைகள் வர்த்தகம் சரிந்து வருகிறது.

நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்கள் பல, உள்நாட்டு ஆடை வர்த்தகத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளன. எனவே, தொழில் துறையினர் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்,'' என்றார்.
"சிஸ்மா' பொது செயலாளர் பாபுஜி கூறியதாவது: பன்முக வரி விதிப்பு, உற்பத்தி செலவினங்கள் அதிகரிப்பு காரணமாக, உள்நாட்டு ஆடைகள் விலை உயர்ந்துள்ளது. பல்வேறு சலுகைகளுக்கு இடையே, இறக்குமதி சலுகைகளையும் பயன்படுத்தி, மலிவு விலை ஆடைகளை, நமது நாட்டில் சீனா சந்தைப்படுத்துகிறது. தேசியத்தை மறந்து, லாப நோக்கில், சீன ஆடைகளையே, வெளிமாநில வர்த்தகர்கள் அதிகம் கொள்முதல் செய்கின்றனர்,

இந்தாண்டு கோடை, குளிர்கால சீதோஷ்ண நிலையில் பெரிய மாற்றம் உருவாகி, வர்த்தகத்தை பாதித்துள்ளது. இவ்விரு காரணங்களால், நடப்பு நிதியாண்டில், திருப்பூரின் உள்நாட்டு வர்த்தக மதிப்பு குறையும் சூழல் உருவாகியுள்ளது. ஒருமுனை வரி விதிப்பை கொண்டு வர வேண்டும்; வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு, வரி விதிக்க வேண்டும். அப்போது, வர்த்தக சமநிலை உருவாகி, உள்நாட்டு வர்த்தகம் சிறப்படையும். இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர்

Address

Tirupur District
Tirupur
641603

Telephone

+919787587171

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tirupur News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share