19/10/2026
கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகத்தில் அமைந்துள்ள சாடிவயல் யானைகள் முகாம், பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, முகாமிற்கு வருகை தந்த பொதுமக்கள் யானைகளை நேரில் கண்டு ஆர்வத்துடன் ரசித்துச் சென்றனர்.
வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் வனத்துறை இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
முகாமிற்கு வந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் யானைகளை அருகில் இருந்து கண்டு மகிழ்ந்தனர். மேலும், யானைகளுக்கு உணவு வழங்கப்படும் நிகழ்வுகளையும், அவற்றின் செயல்பாடுகளையும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
யானைகளின் வாழ்வியல், வனச் சூழலில் அவற்றின் முக்கியத்துவம் மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்கள் நேரடியாக அறிந்துகொள்ள இந்த முகாம் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
மனிதர்களுக்கும் வன உயிரினங்களுக்கும் இடையிலான புரிதலை மேம்படுத்தவும், மாணவர்கள் மற்றும் இளம் தலைமுறையினரிடையே வன உயிரினப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வனத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சாடிவயல் யானைகள் முகாமைப் பொதுமக்கள் தினமும் காலை எட்டரை மணி முதல் ஒன்பதரை மணி வரையிலும், மாலை நான்கரை மணி முதல் ஐந்தரை மணி வரையிலும், வனத்துறையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன உயிரினங்களை நேரில் கண்டு ரசிப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த முயற்சி அமைந்துள்ளது.
வனத்துறையின் இந்த முயற்சி, வன உயிரினப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நமது செய்தியாளர் ஜோசப்