20/07/2026
# நடுகல் வீரர் ஓர் மீள் ஆய்வு,சின்னதாமல் செறு,பேரணாம்பட்டு, வேலூர்:
ஒன்றிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஓர் யானை குத்தி பட்டான் வீரக்கல் சின்னதாமல் செறு என்ற கிராமத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்து, இந்த சுற்று வட்டார பகுதியில் யானையை கொன்று இறந்த நடுகல்லை காண ஆவலாக அதன் இருப்பிடம் தேடி சென்றும் இடம் கண்டறிய முடியாமல் தோல்வியே மிஞ்சியது, இராண்டாவது முறை வழிகாட்ட உடன் வந்தவர் அந்தப் பகுதியில் அன்று சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் வர இயலாது மற்றொருமுறை அழைத்துச் செல்கிறேன் என்று கூறிவிட்டார், அருகில் சென்றும் நடுகல்லை பாராமல் திரும்பினோம்.
மூன்றாவது முறையாக பாறை ஓவியங்கள் பேரணாம்பட்டு மலைகளில் தேடும் முயற்சியில் நண்பர் பழனிசாமி மற்றும் பேராசிரியர் ஜெயவேல், அவர் மாணவர்கள் சிலருடன் பயணித்தேன் கிராம வழிகாட்டி பாதை தவறி அழைத்துச் சென்று எங்களை அலைக்கழித்து, ஒவியங்களை பார்வையிடாமல் திரும்பி வந்தபோது சின்ன தாமல் செறு கிராமத்தில் தேடிய நடுகல் நினைவுக்கு வந்தது, உள்ளூர் மாணவர் அதன் இருப்பிடம் தெரியும் என்று வழிகாட்ட முன்வந்தார்,மற்றவர்கள் மலை இறங்கிய களைப்பில் அவர்கள் இருப்பிடம் திரும்ப, நானும் பழனிச்சாமியும் அந்த மாணவருடன் அந்த நடுகல்லை காண வயல் வெளியில் பயணித்தோம்.
மாணவருக்கு அறிந்த இடமாக இருந்தாலும் சட்டென்று அவருக்கு இவ்விடம் நினைவுக்கு வரவில்லை.,மூன்று பேரும் மூன்று பக்கமாக தேடியதில் பழனிச்சாமி கண்ணில் சிக்கியது நடுகல்.
வயல் வரப்போரம் சுமார் 3 அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் உள்ள பலகை கல்லில் வீரன் உருவம் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. வட்டமான முகம்,நேர் பார்வையுடன்,தலையில் பெரிய கொண்டை, காதில் நீண்ட குண்டலமும்,கழுத்தில் மூன்று ஆரங்கள் அணி செய்கின்றன.
இடுப்பில் அரையடையுடன்,இடது கையில் கேடயமும்,வலது கையில் குறுவாளும், இடுப்பில் வாளின் உறையும் அமைந்துள்ளது.அவரை சுற்றி அலங்கார வளைவு செதுக்கப்பட்டுள்ளது. முகத்தின் நேர் பக்கம் கல்வெட்டு பொளியப்பட்டுள்ளது.
கல்வெட்டு:
1.செல்லா
2.வார் அடியா
3.ன் பம்மான்
4.டை மகன் ஆ
5.ளை கொன்
6.று ஞ்த்திர
7.கொண்டா
8.ந்
கல்வெட்டு பொருள்:
செல்லாவார் அடியான் பம்மான்டை என்பவரின் மகன் யாரோ ஒருவருடன் ஏற்பட்ட பூசல் காரணமாக எதிராளியை கொன்று, உதிரங் கொண்டான்.
போரில் அல்லது பூசலில் உயிர் நீப்பவருக்கு உதிரப்பட்டி என்ற பெயரில் நிலம் வழுங்கபடுவது பண்டைய வழக்கமாகும்.
உயிர் நீத்த இந்த வீரருக்கு உதிரப்பட்டி நிலம் கொடுக்கப்பட்டுள்ளதாக கருதலாம்.
ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த நடுகல்லில் ஆனை(யானை) கொன்று ஊரைக் காத்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் கல்வெட்டு வரிகளில் அது போன்றதொரு வார்த்தைகள் இடம்பெறவில்லை. மேலும் யானையின் உருவமும் இந்த நடுகல்லில் காணப்படவும் இல்லை.
கல்வெட்டு படியின் பல்வேறு கோணத்தில் அனுப்பிய படங்களை படித்து இந்த நடுகல் வீரர் கல்வெட்டை மீள் ஆய்வு செய்து விபரங்களை தந்துதவிய
நண்பர் தஞ்சை ராகவேந்திராவுக்கு நன்றி.
தகுந்த ஆதாரங்களுடன் மாற்று கருத்துகள் இருந்தால்
வரவேற்கப்படுகின்றன.