05/06/2026
இளம் பரம்பரரை உருவாக்கத்தில் அஹதிய்யா
களுத்துறை மாவட்ட அஹதிய்யா சம்மேளன வருடாந்த பொதுக் கூட்டத்தில் 23/05/2026 நிகழ்த்தப்பட்ட உரையின் சுருக்கம்:-
1951 டிசம்பர் 01 ஆம் திகதி தூர நோக்கோடு, நடுநிலைச் சிந்தனையோடு, கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று முஸ்லிம் சமூகத்தினது இளம்பரையின் உள்ளத்தில் இஸ்லாமிய உணர்வை விதைத்து, தனித்துவமான முஸ்லிம்களாக அவர்களை உருவாக்கவும் பயிற்றுவிக்கவும் வேண்டும் என்ற நோக்கோடு உருவாக்கப்பட்டதாகும்.அல்லாஹ்வின் பணிவுள்ள அடியான், நாட்டின் நற்பிரஜை, முழு உலகிற்கும் பங்களிக்கும் மனிதன் ஆகிய முக்கோணப் பண்புகளைக் கொண்ட ஆளுமைகளை இந்த அஹதிய்யா இயக்கம் உருவாக்க விரும்புகிறது.
ஈமான், இபாதத்கள், அன்றாட வாழ்வோடு தொடர்பான இஸ்லாமிய சட்டங்கள், இஸ்லாமிய ஒழுக்கங்கள், இஸ்லாமிய வரலாறு போன்றன அதன் பாடத்திட்டத்தில் உள்ளன.
*தற்போதைய சமூக நிலை*
1) ஈமானுக்கு பெரும் ஆபத்து : நாஸ்திகம், இஸ்லாத்தில் பற்றின்மையும் சந்தேகங்களும்
2) இபாதத்களில் மிகுந்த பலவீனம். வெறும் சடங்காக, உயிரோட்டமின்மை.
3) இயக்க,கட்சி பிடிவாதங்கள், பிளவுகள்,காட்டிக் கொடுப்புக்கள்
4) பிறகலாசாரத் தாக்கம் : சினிமா, காதல் தொடர்புகள், வாழ்வுக்கான சடவாத இலக்குகள், இஸ்லாமிய விழுமியங்களுக்கு மதிப்பின்மை
5) குடும்ப அமைப்பின் ஆட்டம்: உடைந்த,சிதைந்த குடும்பங்கள், விவாகரத்துக்கள் அதிகம்
6) பொருளாதார வீழ்ச்சி: வறுமை, தொழில் வாய்ப்பின்மை, ஹராமான உழைப்பு முயற்சிகள்
7) கல்வித்துறையில் வீழ்ச்சி, ஆர்வமின்மை, உயர் பதவிகளில் போதிய பிரதிநிதித்துவமின்மை
8) பிற சமூகங்களுடனான உறவில் விரிசலும் பலவீனமும். இஸ்லாம் பற்றிய தெளிவு பிற இனத்தவர்களிடம் போதாது அல்லது இன்மை
9) அரசியலில் பொருத்தமற்ற பிரதிநிதித்துவம் - ஊழல்,லஞ்சம்,தூர நோக்கின்மை, சமூக நேயம் இன்மை
10) சுகாதாரத் துறையில் பாரிய வீழ்ச்சி - ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுகையில் தொற்றா நோய்களது விகிதாசாரம் அதிகம்
*சிறுவர் பருவ முக்கியத்துவம்*
அதிமுக்கியத்துவமானது. அஸ்திவாரம்.
# முதற் கோணல் முற்றும் கோணல்
# வளரும் பயிரை முளையில் தெரியும்
# ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது
# தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை
*ஆளுமை உருவாக்கும் இடங்கள்*
வீடு,மத்ரஸா, அஹதிய்யா, பாடசாலை, முன்பள்ளி, சமூக சூழல், மீடியா, கல்விக் கொள்கைகள்
இந்த இடங்களில் பொருத்தமானவர்கள் பதவிகளை வகித்து தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றினால் அல்லாஹ்விடத்திலே அவர்களுக்கு மகத்தான கூலிகள் உள்ளன:
1. மறுமையில் நிழலே இல்லாத சந்தர்ப்பத்தில் அர்ஷின் நிழலில் நீதியாக ஆட்சி செய்த தலைவனுக்கு அல்லாஹ் நிழல் கொடுப்பான்.
2. "யார் நல்லதொரு காரியத்தை ஆரம்பித்து வைக்கிறாரோ அதன் மூலம் அவருக்கும் அவரை முன்மாதிரியாக கொண்டு அந்த நற்கருமங்களில் ஈடுபட்ட அனைவருக்குக்ம் கிடைக்கும் நன்மைகள் வழங்கப்படும்.(ஹதீஸ்)
3. தீமைகள் தலை விரித்தாடுகின்ற பொழுது அவற்றைத் தடுக்காமல் தாமும் தமது குடும்பமும் தொழிலும் என்று தமது வரையறைக்கு மாத்திரம் வாழ்ந்து கொண்டு பார்வையாளர்களாக இருப்பவர்களும் நன்மையை ஏவாமல் இருப்பவர்களும் இறைவனது தண்டனைக்கு உள்ளாகுவார்கள். நன்மையை ஏவி தீமையை தடுக்காமல் இருப்பது இறைவனது சாபத்திற்கு வழிவகுக்கும்.
4. தலைமைத்துவத்தை வகிப்பதற்கு பொருத்தமானவர்கள் இருந்தும் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கும் சூழலில் பொருத்தமற்றவர்கள் அந்த இடத்திற்கு வந்தால் அதன் மூலமாக சமூகத்தில் ஏற்படும் முறைகேடுகள், பிரச்சினைகளுக்கு முழு சமூகமும் அல்லாஹ்விடத்தில் குற்றவாளியாக கருதப்படும்.
*தலைமைத்துவ பண்புகள்*
1. இறை அச்சமும் நேர்மையும் (தக்வா): பொறுப்புதாரி தான் செய்யும் செயல்களுக்கு மறுமையில் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
2. உளத்தூய்மை (இக்லாஸ்):பேருக்காக, புகழுக்காக, வருமானமொன்றை ஈட்டும் நோக்கோடு, எவரையும் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் அல்லாஹ்வின் கூலியை மாத்திரம் எதிர்பார்த்து பதவியேற்பதும் பணிசெய்வதும்
3. பொறுப்புடன் தொடர்பான அறிவு:- யூஸுப்(அலை) "நான் நம்பிக்கை நாணயமானவன் அறிவுஞானமுள்ளவன்."
4. நீதி மற்றும் நேர்மை: உறவினர்கள், நண்பர்கள் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் சமமான நீதியை நிலைநாட்ட வேண்டும்.
5. ஆலோசனை (ஷூரா): எவ்வித சர்வாதிகாரமும் இன்றி முக்கிய முடிவுகளை எடுக்கும் போது மற்றவர்களுடன் கலந்தாலோசித்து (ஷூரா) செயல்பட வேண்டும்.
6. பொறுமையும் சகிப்புத்தன்மையும்: மக்களின் குறைகளைக் கேட்டு, கோபத்தைத் தவிர்த்து, நிதானமாகவும் பொறுமையாகவும் பிரச்சினைகளை அணுக வேண்டும். "(நபியே!) அல்லாஹ்வின் அருளின் காரணமாகவே நீர் அவர்களுடன் மென்மையாக நடந்து கொள்கிறீர். நீர் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பின் அவர்கள் உம்மை விட்டும் விலகிச் சென்றிருப்பார்கள். எனவே, அவர்களை நீர் மன்னித்து, அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடி, காரியங்களில் அவர்களுடன் ஆலோசனையும் செய்வீராக! நீர் உறுதியான முடிவுக்கு வந்து விட்டால் அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை வைப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் (தன் மீது) முழுமையாக நம்பிக்கை வைப்போரை நேசிக்கின்றான்."(3:159)
7. அன்பும் இரக்கமும்: தனது Subordinates (கீழ்ப்பணியாளர்கள்) மீது அன்பு செலுத்துவதோடு அவர்களை மிகவும் அக்கறையுடன் கண்காணிப்பது.
8. முன்மாதிரியாக வாழுதல்:-"நீங்கள் செய்யாததை ஏன் சொல்லுகிறீர்கள்"
9. பரந்த மனப்பாங்கு: கொள்கைகள், தனிமனித வித்தியாசங்கள் முரண்பாடுகளை கவனமாக கையாளும் பக்குவமும் நிதானமும்
10. மாறாத் தன்மை (Stability):- நபியவர்கள் தன் மகனார் இறந்த போது சூரிய கிரகணம் தோன்றி இருள் சூழ்ந்த போது ஸஹாபாக்களுக்கு இறைவனது ஏற்பாடு பற்றி தெளிவுபடுத்தி வைத்தார்கள்.
11. அடுத்தடுத்த பொறுப்புக்களை வகிக்கும் தகுதியுள்ளவர்களை(Second Layer) உருவாக்குவது
*உரிய முறையில் நிறைவேற்றாத போது..*
இவர்கள் தமது கடமைகளை அல்லாஹ் எதிர்பார்க்கும் வகையில் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.(இது அவர்களது கடமை) இல்லாத போது அது துரோகமாகும்.
"அல்லாஹ் ஒருவருக்கு மக்களது பொறுப்பொன்றை ஒப்படைத்து அவர் தனது பொறுப்பிலுள்ளவர்களை ஏமாற்றிய நிலையிலேயே மரணமடைந்தால், அல்லாஹ் அவருக்கு சுவனத்தைத் தடைசெய்வான்.”
(புகாரி: 7150 முஸ்லிம்: 142)
"ஒவ்வொரு துரோகிக்கும் மறுமை நாளில் ஒரு கொடி உயர்த்தப்படும். அவன் செய்த துரோகத்தின் அளவுக்கேற்ப அது உயர்த்தப்படும். அறிந்துகொள்ளுங்கள்! பொதுமக்களின் தலைவராக இருப்பவன் செய்யும் துரோகத்தை விட பெரிய துரோகம் எதுவும் இல்லை.” (முஸ்லிம்: 1738)
"எந்தவொரு அடியாருக்கு அல்லாஹ் குடிமக்களின் பொறுப்பை வழங்கி, அவர் அவர்களை நன்மையை நாடி (அவர்களின் நலனில் அக்கறை கொண்டு) பாதுகாக்கவில்லையாயின், அவர் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகரமாட்டார்." (புகாரி - 7150)
*தலைமைத்துவ கட்டுப்பாடு:-*
يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم {النساء:59}.
أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن تأمر عليكم عبد حبشي ( رواه أبو داود وغيره )
إن الله يرضى لكم ثلاثا، يرضى لكم أن تعبدوه ولا تشركوا به شيئا، وأن تعتصموا بحبل الله جميعا، وأن تناصحوا من ولاه الله أمركم. (رواه مالك في الموطأ)
اسمعوا وأطيعوا وإن استعمل حبشي كأن رأسه زبيبة. (رواه البخاري)
لا طاعة في معصية الله، إنما الطاعة في المعروف. (متفق عليه)
1. "நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள், தூதருக்கும் கீழ்படியுங்கள், மேலும் உங்களில் அதிகாரம் உள்ளவர்களுக்கும் கீழ்படியுங்கள்" {அல்-நிஸா: 59}.
2. "அல்லாஹ்வுக்கு அஞ்சுதல், செவிமடுத்தல் மற்றும் கீழ்படிதல் ஆகியவற்றை நான் உங்களுக்கு உபதேசிக்கிறேன். உங்கள் மீது ஒரு ஹபஷி அடிமை அதிகாரம் செலுத்தப்பட்டாலும் சரியே" (அபூதாவூத் மற்றும் பிறர் அறிவித்தார்கள்).
3. "நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்காக மூன்று விஷயங்களை விரும்புகிறான்: அ. நீங்கள் அவனையே வணங்க வேண்டும், அவனுக்கு எதையும் இணைவைக்கூடாது. ஆ. நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் கயிற்றை உறுதியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும். இ. அல்லாஹ் உங்கள் காரியத்தை ஒப்படைத்தவருக்கு நீங்கள் நல்லுபதேசம் செய்ய வேண்டும்" (மாலிக், அல்-முவத்தா)
4. "செவிமடுத்து கீழ்படியுங்கள். உங்கள் மீது ஹபஷி அதிகாரம் செலுத்தினாலும் சரியே" (புகாரி).
5. "அல்லாஹ்வுக்கு மாறு செய்வதில் கீழ்படிதல் கிடையாது. கீழ்படிதல் என்பது நன்மையான காரியங்களில் மட்டுமே" (புகாரி, முஸ்லிம் ஆகியோர் ஒப்புக்கொண்ட ஹதீஸ்).
தற்கால சூழலில் அஹதிய்யா மத்திய சம்மேளனம், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் பல முயற்சிகளை செய்து வருகிறது.
*இதற்காக*
1. நல்லதொரு பாடத்திட்டம்
2. அப்பாடத்திட்டத்தை உரிய முறையில் மாணவர்கள் கற்பதற்கும் ஆசான்கள் கற்பிப்பதற்குமான பாடநூல்கள்
3. இப்பாடத் திட்டத்தை மதிப்பீடு செய்வதற்கான இடைநிலை பரீட்சை மத்திய சம்மேளனத்தாலும் இறுதிப் பரீட்சை தர்மாச்சாரியார் பரீட்சை என்பன அரசாங்க பரீட்சை திணைக்களத்தாலும் நடாத்தப்படுகின்றன.
இவர்கள் அனைவரும்மேற்கொண்டிருக்கும் இந்த புனித பணிக்கு முஸ்லிம் சமூகத்தின் உலமாக்கள் புத்திஜீவிகள்,தனவந்தர்கள் அனைவரும் தமது ஒத்துழைப்பை வழங்கி நல்லதொரு இஸ்லாமிய பரம்பரையை உருவாக்குவதற்கும் அல்லாஹ்வின் அருளை பெற்றுக் கொள்வதற்கும் முயற்சிக்க வேண்டும்.
அஷ்ஷைக் பளீல் (நளீமி)