26/08/2026
பொதுமக்கள் முறைப்பாடுகளை நேரடியாக மாவட்ட செயலாளரிடம் தெரிவிக்கும் வசதி
======================================================
துணுக்காய் பிரதேச பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்
துணுக்காய் பிரதேச செயலகத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு அரச சேவைகள் மற்றும் உதவித்திட்டங்கள் வெளிப்படைத்தன்மையுடனும், நியாயமான முறையிலும், உரிய நடைமுறைகளுக்கு அமைவாகவும் முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்வதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகின்றது.
குறிப்பாக தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வீட்டுத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச உதவித்திட்டங்கள், நலன்புரித் திட்டங்கள் மற்றும் பிரதேச செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பில் பொதுமக்கள் ஏதேனும் பாதிப்பை எதிர்கொண்டிருந்தாலோ அல்லது தங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகக் கருதினாலோ, அதுகுறித்த தங்களது முறைப்பாடுகளை நேரடியாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடியும்.
மேலும், ஏதேனும் திட்டம் அல்லது அரச சேவையை நடைமுறைப்படுத்தும் போது முறைகேடு, மோசடி, ஊழல், பாரபட்சம், தகுதியற்ற நபர்களுக்கு நன்மை வழங்குதல், தகுதியான நபர்கள் புறக்கணிக்கப்படுதல் அல்லது அதிகார துஷ்பிரயோகம் போன்றவை இடம்பெறுவதாக பொதுமக்கள் கருதினால், அவை தொடர்பான தகவல்களையும் முறைப்பாடுகளையும் தயக்கமின்றி மாவட்ட செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வரலாம்.
முறைப்பாடுகள் எவ்வாறு தெரிவிக்கலாம்?
பொதுமக்கள் தங்களது முறைப்பாடுகளை கீழே வழங்கப்பட்டுள்ள QR குறியீட்டை Scan செய்து, அதன்மூலம் நேரடியாகத் தெரிவிக்க முடியும்.
QR குறியீட்டை பயன்படுத்த முடியாதவர்கள் தங்களது முறைப்பாட்டை எழுத்து மூலம் கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும்
மாவட்ட செயலாளர்
மாவட்ட செயலகம்
முல்லைத்தீவு
மேலும், பொதுமக்கள் தங்களது முறைப்பாட்டை முல்லைத்தீவு மாவட்ட செயலாளரை நேரடியாகச் சந்தித்தும் சமர்ப்பிக்க முடியும்.
முறைப்பாடுகள் தொடர்பான நடவடிக்கை
QR குறியீடு, எழுத்து மூலமான முறைப்பாடு அல்லது நேரடி சந்திப்பு ஆகிய வழிகளில் மாவட்ட செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்படும் முறைப்பாடுகள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு, தேவையான விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
முறைப்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் அதன் முன்னேற்றம் தொடர்பாக, இயன்றவரை முறைப்பாட்டாளருக்கு உரிய முறையில் தகவல் வழங்கப்படும்.
எனவே, பொதுமக்கள் தங்களது உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்காக, ஏதேனும் அநீதி, முறைகேடு அல்லது மோசடி இடம்பெறுவதாகக் கருதினால், அதனை மறைக்காமல் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
உங்கள் முறைப்பாடு உங்கள் உரிமையைப் பாதுகாக்கும் முக்கியமான ஒரு குரல்.
பொதுமக்கள் அச்சமின்றி, உண்மையான தகவல்களின் அடிப்படையில் தங்களது முறைப்பாடுகளைத் தெரிவிக்கலாம்.
ஊடகப்பிரிவு,
பிரதேச செயலகம்,
துணுக்காய்.