18/06/2026
மூன்றாவது மாதாந்த நிர்வாகக் கூட்ட அறிக்கை!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ
எமது சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) பழைய மாணவர்கள் சங்கத்தின் மூன்றாவது மாதாந்த நிர்வாகக் கூட்டம் 13.06.2026 அன்று பாடசாலை அதிபரும் பழைய மாணவர்கள் சங்கத்தின் தலைவருமான திரு. ஏ.ஆர்.எம். உவைஸ் (நலீமி) அவர்களின் தலைமையில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தின் ஆரம்பத்தில், கடந்த மாத நிர்வாகக் கூட்டத்தின் அறிக்கை செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்டதுடன், பொருளாளர் கடந்த மாத நிதி அறிக்கையையும் சபையில் சமர்ப்பித்தார். இவ்விரு அறிக்கைகளும் உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.
பாடசாலையின் அபிவிருத்தித் தேவைகள்
கடந்த கூட்டத் தீர்மானத்தின் அடிப்படையில், பழைய மாணவர்கள் சங்கத்தினால் பாடசாலையின் அபிவிருத்திக் குழுவிற்கு அனுப்பப்பட்டிருந்த கடிதத்தின் பிரகாரம், கூட்டத்தில் கலந்து கொண்ட அதிபர் அவர்களால் பாடசாலையில் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பௌதீக அபிவிருத்திகள் மற்றும் ஏனைய தேவைகள் தொடர்பான ஆரம்ப மதிப்பீட்டு அறிக்கைகள் (Estimates) சமர்ப்பிக்கப்பட்டன.
இதன் அடிப்படையில், பழைய மாணவர்கள் சங்கத்தில் உள்ள பொறியியலாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் துறைசார் உறுப்பினர்களை இணைத்து பாடசாலையின் அனைத்து தேவைகளையும் பட்டியலிட்டு, அவற்றிற்கான தொழில்நுட்ப மதிப்பீடுகளை தயாரித்து, வலயக் கல்வி அலுவலகத்தின் தொழில்நுட்ப அதிகாரியின் அங்கீகாரத்துடன் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
பழைய மாணவர்கள் சங்கம், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு (SDEC) மற்றும் பாடசாலை நிர்வாகம் ஆகியவற்றின் பொறுப்புகள், அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் நோக்கில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, 29.06.2026 அன்று பாடசாலை வளாகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் சகோதரர் மாகில் அவர்கள் வளவாளராக கலந்து கொள்ளும் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாடசாலை மைதானம் மற்றும் கட்டாக்காலி மாடுகள்
பழைய மாணவர் ஒருவரால் முன்வைக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பாடசாலை மைதானத்திற்கும் வளாகத்திற்கும் கட்டாக்காலி மாடுகள் நுழைவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பழைய மாணவர்கள் சங்கம் பாடசாலை நிர்வாகத்திற்கு எழுத்து மூலமாக அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில், சினேஹபூர்வமாக உரிமையாளர்களுடன் கலந்துரையாடுவதாகவும் தவறும் பட்சத்தில் பாடசாலை நிர்வாகம் சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு உத்தியோகபூர்வமாக கடிதங்கள் அனுப்பி, எதிர்காலத்தில் இத்தகைய நிலைமைகள் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
பழைய மாணவர்கள் சங்கக் கட்டிடம்
பழைய மாணவர்கள் சங்கத்திற்கென தனியான நிர்வாகக் கட்டிடம் அமைப்பது தொடர்பான முன்மொழிவு மீண்டும் ஆராயப்பட்டது.
அதற்காக பாடசாலை வளாகத்திற்குள் பொருத்தமான இடம் ஒன்று அடையாளம் காணப்பட்டு, அதனை பழைய மாணவர்கள் சங்கத்திற்கு வழங்கும் பரிந்துரை பாடசாலை நிர்வாகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தேவையான அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை அதிபர் அவர்களின் ஊடாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.
அரச நிறுவனங்களுடனான சந்திப்புகள்
பாடசாலையின் அபிவிருத்தி மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக சம்மாந்துறையில் உள்ள அரச நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கான குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் ஒத்துழைப்பு
கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் அம்பாறை மாவட்ட அலுவலகத்திற்கு பழைய மாணவர்கள் சங்கம் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்திருந்தது.
இதன் விளைவாக, 14.06.2026 அன்று இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரிகள் பாடசாலைக்கு விஜயம் செய்து,
13 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்கான உபகரணங்கள் வழங்குதல்,
கிரிக்கெட் அபிவிருத்தி திட்டங்கள்,
மைதான புனரமைப்பு நடவடிக்கைகள்
தொடர்பாக நேரடி கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.
இத்திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்காக பாடசாலை நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட தீர்மானிக்கப்பட்டது.
பாடசாலை சின்னம் (Logo)
தற்போது பாடசாலையின் சின்னம் பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதால், பாடசாலையின் வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தியோகபூர்வ சின்னத்தையே எதிர்காலத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பான இறுதி முடிவு பாடசாலை நிர்வாகம் மற்றும் அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவுடன் கலந்தாலோசிக்கப்பட்டு அடுத்த கூட்டத்தில் அறிவிக்கப்படும் என அதிபர் தெரிவித்தார்.
பழைய மாணவர்கள் சங்க வங்கிக் கணக்கு
பழைய மாணவர்கள் சங்கத்திற்கென உத்தியோகபூர்வ வங்கிக் கணக்கொன்றை ஆரம்பிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதற்கான ஆவணங்களைத் திரட்டி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஒரு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
கல்வி முன்னேற்றம்
பாடசாலையின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில்,
மேலதிக வகுப்புகள்,
திறன்வள மேம்பாட்டு நிகழ்ச்சிகள்,
மாணவர்களின் கல்வி அடைவுகளை உயர்த்தும் திட்டங்கள்
தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இவ்விடயங்கள் தொடர்பாக பாடசாலை நிர்வாகத்துடன் இணைந்து நிரந்தரமான வேலைத்திட்டங்களை உருவாக்குவதற்கு அதிபர் அவர்களின் தலைமையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
எமது பாடசாலையின் அபிவிருத்தி, கல்வி முன்னேற்றம் மற்றும் பழைய மாணவர்களின் பங்களிப்பை வலுப்படுத்தும் நோக்கில் இக்கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த அனைத்து பழைய மாணவர்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும்.
நன்றி.
செயலாளர்
பழைய மாணவர்கள் சங்கம்
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை)