16/07/2020
'மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் மீதான விசாரணைகளை ஓகஸ்ட் 20 வரை ஒத்திவைக்குக' - பொலிஸ்மா அதிபருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தொடர்பான விசாரணைகள், வாக்குமூலம் பெறும் நடவடிக்கைகளை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு, பொலிஸ்மா அதிபருக்கு தேர்தல்கள் ஆணைகுழு நேற்று அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
தேர்தல் காலத்தில் வேண்டுமென்றே, உள்நோக்கத்துடன் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது என்றும் கொழும்புக்கு அடிக்கடி அழைக்கப்பட்டு, பரப்புரையில் ஈடுபடாது தடுக்கும் நோக்கில் பொலிஸார் செயற்படுவதால், நானும் எனது கட்சியைச் சேர்ந்த 30 பேரும் பாதிப்படைவதோடு, தொடர் மன அழுத்தம் காரணமாக நோய்த் தாக்கமும் ஏற்படுவதாகவும், நோய்க்கு மருத்துவத்துக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால், அங்கும் சோதனையில் ஈடுபடுவதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனத்துக்கு நேற்றுக்காலை அவசரமாகத் தெரியப்படுத்தினார்.
இந்த முறைப்பாட்டை ஆராய்ந்த ஆணைக்குழு, ரிஷாட் பதியுதீன் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை ஓகஸ்ட் 20 ஆம் திகதி வரை இடைநிறுத்துமாறு, பொலிஸ்மா அதிபருக்கு அவசர கடிதம் அனுப்பியுள்ளது.
இதேநேரம், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் சுகயீனம் காரணமாக, நேற்று மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை உண்மையா? என பொலிஸார், வைத்தியசாலைக்குச் சென்று ஆராய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி காலைக்கதிர்
16. 07. 2020