07/09/2026
இன்று (07.09.2026) சட்டப்பேரவையில், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், பத்திரிகை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:
பத்திரிகை நண்பர்களுக்கு, முதலில் எனது வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த வியாழக்கிழமை அன்று, காவல் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில், எதிர்க்கட்சியின் சார்பாக, எதிர்க்கட்சித் தலைவராக நான் உரையாற்றி இருந்தேன். கிட்டத்தட்ட 35 நிமிடங்கள் பேசியிருந்தேன். பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சொல்லியிருந்தேன். 116 நாட்கள் ஆட்சியில், சட்டம் - ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்கெட்டுள்ளது என்று மிகத் தெளிவாக, விளக்கமாக ஆதாரங்களுடன் பேசியிருந்தேன்.
திசைதிருப்பாமல் பதில் சொல்லுங்கள்.
அரசுக்கு, குறிப்பாக முதலமைச்சருக்கு 15 கேள்விகள் வைத்திருந்தேன். இதற்கெல்லாம் பதில் சொல்லுங்கள். திசைதிருப்பாமல் நேரடியாக நாங்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தேன்.
இன்று, முதலமைச்சர் அவர்கள் பதிலுரை சொல்லியிருக்கிறார். கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் அவர் பேசினார். அதில் முதல் 15 நிமிடங்கள், காவல் துறை சார்பாக என்னென்ன நடவடிக்கை எடுத்திருக்கிறோம், என்று பட்டியலிட்டார். நாங்கள் எல்லாம் அதை அமைதியாகக் கேட்டுக்கொண்டு இருந்தோம். அதன்பின், 15-வது நிமிடத்துக்குப் பிறகு, எந்த வித ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டுகளை எங்கள்மீது வைக்க ஆரம்பித்தார். நான் வியாழக்கிழமை பேசும்போது, இதையும் குறிப்பிட்டுப் பேசினேன். நீங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டோம் என்பதை நம்புங்கள். தி.மு.க. ஆட்சியில் இல்லை என்பதை நீங்கள் நம்ப வேண்டும். உங்களின் ஆட்சி அமைந்துவிட்டது என்பதை தயவுசெய்து நம்புங்கள். எங்கள் மேல் பழியைப் போடாமல், இந்த மூன்று மாதங்களில் என்னென்ன செய்திருக்கிறீர்கள், என்னவெல்லாம் செய்யப்போகிறீர்கள் என்று பதில் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தோம்.
பொய்யான குற்றச்சாட்டுகள்!
மீண்டும் தி.மு.க. ஆட்சி நடக்கிறது என்ற அதே நினைப்பில், முதலமைச்சர் அவர்கள் பொய்யான குற்றச்சாட்டுகளை, கட்சிக் கூட்டங்களில் எங்களின் உறுப்பினர்கள் வெளியில் பேசியதை, இந்த அரசின்மீது வைத்த விமர்சனங்களை எல்லாம் உள்ளே வந்து பேசி, அவற்றையெல்லாம் அவைக் குறிப்பில் பதிவேற்றம் செய்ய ஆரம்பித்தார். அப்போது, நானும் எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் எழுந்து, சபாநாயகரிடம் முதலமைச்சர் வெளியே பேசுவதைப் பற்றி, இங்கு பேசுகிறார். `எங்களுக்குப் பேச வாய்ப்பு கொடுங்கள்.. நாங்கள் பதில் சொல்ல வேண்டும்’ என்று கேட்டோம். ஆனால், எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. தொடர்ந்து முதலமைச்சர் அவர்கள், பல தவறான, பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வைத்துக்கொண்டு இருந்தார். அவர் கூறும் எந்தக் குற்றச்சாட்டுக்கும் நாங்கள் பதில் சொல்ல எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது!
முதலமைச்சர் பேசி முடித்தவுடன், நாங்கள் மீண்டும் எழுந்து கேட்டோம். `எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள், எங்கள்மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார், அதற்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டும்’ என்று கேட்டோம். ஆனாலும் எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவருக்கு வாய்ப்பு கொடுக்கிறேன் என்று முதலில் ஒப்புக்கொண்டார். ஆனால், என்ன அழுத்தம் வந்தது என்று தெரியவில்லை. முதலமைச்சர் சொன்னதாலா, அமைச்சர் பெருமக்கள் சொன்னதாலா என்று தெரியவில்லை. திடீரென்று தனது போக்கை மாற்றிக்கொண்டு, அனுமதிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்.
எங்களின் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக, முதலமைச்சரின் பேச்சை முழுமையாகப் பார்த்துவிட்டு, வெளிநடப்பு செய்திருக்கிறோம். நாங்கள் வைத்த ஒரு கேள்விக்குக்கூட அவர் பதில் சொல்லவில்லை. முதலமைச்சர், `இதற்கெல்லாம் திங்கட்கிழமை பதில் சொல்கிறேன்’ என்று கடந்த வியாழக்கிழமை சொல்லிவிட்டு, வேகமாக ஓடிப் போய்விட்டார். நான்கூட, தயாராகி வருவார்.. மூன்று நாள் டைம் இருக்கிறது. நன்றாக மனப்பாடம் செய்துவிட்டு வருவார் என்று நினைத்தேன். அதேமாதிரி, வியாழக்கிழமை எப்படி ஓட்டப் பந்தயத்தில் ஓடியது மாதிரி ஓடினாரோ, அதேமாதிரி இன்று மனப்பாடம் செய்துவந்து ஒப்பித்தல் போட்டி மாதிரி, சட்டசபையில் தவறான கருத்துகளை, பொய்யான குற்றச்சாட்டுகளை ஒப்பித்துள்ளார்.
ரீல்ஸ்களுக்காக மட்டுமே பதிலுரை!
நான் சொன்ன அதே பஞ்ச் டயலாக், அதே சினிமா வசனங்கள், அதே ஆக்டிங் ரீல்ஸ்களுக்காக மட்டுமே முதலமைச்சர் அவர்கள் இந்தப் பதிலுரையைச் சொல்லியிருக்கிறார். இந்த ஆட்சி அமைந்ததிலிருந்து, சட்டம்-ஒழுங்கு எந்த நிலைமையில் இருக்கிறது என்று பத்திரிகையாளர் நண்பர்கள் உங்களுக்குத் தெரியும்.
தினமும் தொலைக்காட்சிகளில் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். அப்படி சட்டம் ஒழுங்கு சம்பந்தமாக நாங்கள் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல், வெறும் பஞ்ச் டயலாக், வெறும் திசைதிரும்பும் உத்திதான் இன்றும் நடந்தது. உதாரணத்துக்கு, அவர்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், உறுப்பினர்கள் மேல் எல்லாம் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அதன்மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என்று நாங்கள் கேட்டிருந்தோம். அதற்கு மாறாக, தி.மு.க. ஆட்சியில் இவர்கள் மேல் எல்லாம் இந்தந்த வழக்கு இருக்கிறது என்று, எங்கள் மேல் திரும்புகிறார். எங்கள் மேல் வழக்கு இருந்தால், நீங்கள் நடவடிக்கை எடுங்கள் என்றுதான் நாங்கள் சொல்கிறோம்.
இன்னும் சொல்லப்போனால், ஒரு அமைச்சர் ஐ.பி.எல் விளையாட்டு அரங்கிலேயே உட்கார்ந்து பவுடர் போட்டதையெல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர் மேல் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் வியாழக்கிழமை பேசியதும், அமைச்சர்கள் எல்லாம் கடந்த மூன்று நாட்களாக என்ன செய்துகொண்டு இருந்தார்கள். என்னென்ன பிரச்சினைகளை எல்லாம் சரிசெய்யப் பார்த்தார்கள் என்பதை பத்திரிகை நண்பர்கள் நீங்களும் பார்த்திருப்பீர்கள். அவர்களின் கட்சிக்காரர்களே இன்று போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார்கள்.
பட்டப்பகலில் இரண்டு கொலைகள்!
நேற்று, சென்னையில் பட்டப்பகலில் இரண்டு கொலைகள் நடந்திருக்கின்றன. சி.சி.டி.வி. கேமராக்களில் அவை பதிவாகியுள்ளன. அவற்றைப் பற்றிப் பேச வாய்ப்பு கேட்டேன். அதற்கும் வாய்ப்பு கொடுக்கவில்லை. இதைப் பற்றி கேட்டால், இதற்கெல்லாம் பதில் சொல்லாமல், 1970-ஆம் ஆண்டுக்குச் சென்றுவிட்டார் முதலமைச்சர். `சர்க்காரியா கமிஷன்’ பற்றிப் பேசகிறார். `மிசா’வைப் பற்றிப் பேசுகிறார். `மிசா’வைப் பற்றிப் பேசுவதற்கு இவருக்கு ஏதாவது அருகதை இருக்கிறதா? அல்லது தகுதி இருக்கிறதா? சர்க்காரியா கமிஷன் பற்றி இவருக்கு ஏதாவது தெரியுமா? யாரோ எழுதிக் கொடுத்ததை மூன்று நாட்களாக உட்கார்ந்து மனப்பாடம் செய்துவிட்டு வந்து, இங்கே அதை அப்படியே வாந்தி எடுத்திருக்கிறார்.
இவர் ஆட்சிக்கு வந்தது, மிகப் பெரிய ஒரு விபத்து!
சர்க்காரியா கமிஷனில் எந்தத் தவறும் நடக்கவில்லை என்று அந்த கமிஷனே அறிக்கை கொடுத்திருக்கிறது. அதேபோன்று, மிசாவைப் பற்றி இவர் பேசுகிறார். கொடநாட்டில் இவருடைய திரைப்படத்தின் வெளியீட்டிற்காக வாட்ச்மேன் வேலை பார்த்தவர்தான் இந்த முதலமைச்சர் அவர்கள். இவருக்கு மிசாவைப் பற்றியும், எங்களுடைய தலைவரைப் பற்றியும் பேசுவதற்கு ஏதாவது தகுதி இருக்கிறதா? ஒரு சதவிகிதமாவது தகுதி இருக்கிறதா? அந்தத் தகுதியை இவர் வளர்த்துக்கொண்டிருக்கிறாரா? இவர் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து. இவர் ஆட்சிக்கு வந்தது மிகப் பெரிய ஒரு விபத்து. இவருக்கு மிசாவைப் பற்றியும், சர்க்காரியா கமிஷன் பற்றியும் பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை. அவற்றில் எந்த ஆதாரமும் இல்லை, வெறும் குற்றச்சாட்டுகள் மட்டுமே. அதேபோன்று, அமலாக்கத் துறை (E.D) சொன்ன விஷயங்களையெல்லாம், இவர் இங்கே படித்துக் காட்டுகிறார். அவையெல்லாம் வெறும் குற்றச்சாட்டுகள்! எதுவுமே நிரூபிக்கப்படவில்லை; விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. மூன்று கோப்புகளைத் திறக்கச் சொன்னார்கள் என்று சொல்லிவிட்டு, அதைப் பற்றி எதுவுமே கூறவில்லை. அமலாக்கத் துறை என்னென்ன குற்றச்சாட்டுகளைச் சொல்லியிருக்கிறார்கள் என்று, அந்தக் குற்றச்சாட்டுகளைத்தான் இவர் சட்டமன்றத்தில் படித்துக் காட்டுகிறார்.
இன்னும் சொல்லப்போனால், சர்க்காரியா கமிஷனுக்குப் பிறகு மக்களுடைய ஆதரவைப் பெற்று மூன்று முறை திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. இங்கே இருக்கக்கூடிய அத்தனை பேருக்கும் தெரியும்; தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியும், ஆட்சியில் இருக்கும்போது ஊழல் செய்தார்கள் என்று நிரூபிக்கப்பட்டு, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரே முதலமைச்சர் யார், ஒரே தலைவர் யார் என்பது இங்கே இருக்கக்கூடிய அத்தனை பேருக்கும், உங்களுக்கும் தெரியும்.
டம்மி முதலமைச்சர்!
திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த எங்களுடைய தலைவர்களோ, எங்களுடைய முன்னாள் அமைச்சர்களோ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களோ, இதுவரைக்கும் யாரும் அதுபோன்று தண்டிக்கப்படவில்லை. எந்த ஊழல் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை. எனவே, இப்படி எங்கள் மேல் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இவ்வளவு குற்றச்சாட்டுகள் உங்கள்மீது இருக்கின்றன என்று நாங்களும் கூற முடியும். முதலமைச்சர்மீது கூடத்தான் வருமான வரித்துறை வழக்கு இருக்கிறது. 15 கோடி ரூபாய் ஊதியம் பெற்றதை மறைத்ததாக, அவர்மீது ஒரு வழக்கு இருக்கிறது. வருமான வரித் துறை வழக்கு இருக்கிறது. வருமானத்தை மறைத்ததற்கு வழக்குத் தொடர்ந்தால், மிகவும் தாமதமாக வழக்குத் தொடர்ந்திருக்கிறீர்கள் என்று நீதிமன்றத்தில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டவர்தான், இன்றைக்கு இருக்கக்கூடிய இந்த டம்மி முதலமைச்சர். அதுமட்டுமில்லாமல், இங்கே இருக்கக்கூடிய பொதுப்பணித் துறை அமைச்சர்மீது அமலாக்கத் துறை வழக்கு இருக்கிறது, அது நடந்துகொண்டிருக்கிறது.
இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?
இப்போது, அவர்கள் கட்சியில் புதிதாகச் சேர்த்திருக்கிறார்களே, திரு. விஜயபாஸ்கர், திரு.கு.ப.கிருஷ்ணன், இப்படிப் பல்வேறு தலைவர்கள் மீது, முன்னாள் அமைச்சர்கள்மீது எல்லாம் அமலாக்கத் துறை வழக்குகள் இருக்கின்றன. இப்படி இவர்கள் எல்லாரையும் கூட சேர்த்து வைத்துக்கொண்டு, எங்களைக் குறை சொல்வதற்கு இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? அதுமட்டுமில்லாமல், நேற்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் பேசும்போது, என்ன பேசினார் என்பதை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள்.
ஆட்சி அமைப்பதற்குப் பெட்டி பெட்டியாகப் பணத்தை எடுத்துக்கொண்டு வந்து, என்ன அமைச்சர் பொறுப்பு வேண்டும். இப்போது நாங்கள் கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறோம், உங்கள் ஆதரவு வேண்டும் என்று கேட்டிருப்பதாக ஐ.யூ.எம்.எல். சட்டமன்ற உறுப்பினர் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார். இப்படிப் பகிரங்கமாகக் குதிரை பேரத்தில் இந்த அரசு நடந்துகொண்டிருக்கிறது.எங்கள்மீது அமலாக்கத் துறை வழக்கு நடக்கலாம், நீதிமன்றத்தில் வழக்கு நடக்கலாம். ஆனால், அவற்றையெல்லாம் சட்டப்படி சந்திப்பதற்கு நாங்கள் அத்தனை பேரும் தயார். நேற்று முன்தினம் எங்களை மிரட்டுவதற்காக, நாங்கள் எல்லாம் பயந்துவிடுவோம் என்று லஞ்ச ஒழிப்புத் துறையை (DVAC) வைத்து முன்னாள் அமைச்சர், முதன்மைச் செயலாளர் அண்ணன் நேரு அவர்களின் வீட்டிற்குச் சோதனையிடச் சென்றார்கள். சோதனையிடச் சென்றவர்கள், ஒரு ஐந்து ஆறு மணி நேரத்திலெல்லாம் முடித்துக்கொண்டு வெளியே வந்து, `ஒன்றும் இல்லை’ என்று கூறிவிட்டார்கள். வெளியே வந்து அண்ணன் நேரு அவர்களே தெளிவாக பேட்டி கொடுத்திருக்கிறார்கள். எனவே, இதையெல்லாம் சட்டப்படி சந்திப்பதற்கு நாங்கள் அனைவரும் தயார்.
நான் இந்த அரசின்மீது இப்போது பகிரங்கமாக ஒரு குற்றச்சாட்டை வைக்கிறேன். முதலமைச்சருடைய நண்பர்கள் அவருடைய அலுவலகத்தில் இருக்கக்கூடிய ஆலோசகர்கள் அவர் பெயர் விஷ்ணு ரெட்டி. சமீபத்தில், ஒரு அமைச்சர் பேசும்போது நன்றி கூறுகிறார், திரு விஷ்ணு ரெட்டி. அவருடைய மைத்துனன் திரு. சுஜய் ரெட்டி. அவருடைய பிசினஸ் பார்ட்னர் திரு அனில் ரெட்டி. இவர்கள் அனைவரும் சேர்ந்து அரசாங்கம் நடத்தக்கூடிய சுரங்கங்கள் அனைத்தையும் இப்போது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். இதற்கான ஒவ்வொரு ஆதாரத்தையும் நான் ஒவ்வொன்றாக வெளியிடப்போகிறேன்.
இப்படி நாங்கள் கேட்ட கேள்வி எதற்கும் பதில் சொல்வதற்கு, வக்கற்ற ஓர் அரசு இன்றைக்கு அமைந்திருக்கிறது. முதலமைச்சருடைய பதில் முழுக்க முழுக்க ஒரு திரைப்படப் படப்பிடிப்பிற்கு என்னென்ன தேவையோ, அதை மூன்று நாட்களாக உட்கார்ந்து மனப்பாடம் செய்து வந்து இங்கே பேசியிருக்கிறார். இவற்றையெல்லாம் கண்டித்துத்தான், திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்கிறோம். அதேபோன்று பாரபட்சமாக, ஒருதலைபட்சமாக நடந்து கொண்டிருக்கக்கூடிய சட்டப்பேரவைத் தலைவர் அவர்களுக்கு, எங்களுடைய கண்டனத்தை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி.
இதனைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களின் விவரம் வருமாறு:
கேள்வி : பொதுவாக பதிலுரை முடிந்த பிறகுதான், கேள்வி கேட்க வேண்டும் என்று விதிமுறை இருக்கிறது. நீங்கள் பதிலுரை பேசவிடாமல், தொடர்ச்சியாக குறுக்கிடுவதாக சபாநாயகர் சொல்லியிருக்கிறாரா?
பதில் : முதலமைச்சர் என்ன பேசப்போகிறார் என்பதைக் கேட்பதற்குத்தான் நாங்களும் வந்தோம். ஏனெனில், நாங்கள் 15 கேள்விகள் கேட்டிருக்கிறோம்; அதற்கு ஏதாவது பதில் சொல்வாரா என்றுதான் நானும் கேள்விகளின் பட்டியலையெல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு, பதில் சொல்வாரா என்று குறிப்பெடுக்க உட்கார்ந்திருந்தேன். ஒரே ஒரு பதில் மட்டும் சொன்னார்எந்தப் பதிலும் இல்லை.
15-வது நிமிடத்தில் குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு ஆரம்பித்துவிட்டார். பொய்க் குற்றச்சாட்டுகள், எந்த ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டுகளை வைக்க ஆரம்பித்துவிட்டார். அவையில் தவறான தகவல்களை, பொய்களைச் சொல்லும்போது, குற்றச்சாட்டுகளைச் சொல்லும்போது, எழுந்து ஆட்சேபணை தெரிவிப்பது எங்களுடைய உரிமை. அதனால் எங்களுக்குப் பேச அனுமதி கொடுங்கள் என்று கேட்டோம். `பேசி முடித்ததற்குப் பிறகு கொடுக்கிறேன்’ என்று சொன்னார் சபாநாயகர். அதுவரைக்கும் நாங்கள் காத்திருந்தோம். ஆனால், இவர் பேசுவது எல்லாமே `ரீல்ஸ் கன்டென்ட்’ எல்லாமே திரைப்படப் படப்பிடிப்பிற்கான டயலாக்ஸ், எல்லாமே பஞ்ச் டயலாக்ஸ்தான். எனவே தொடர்ந்து அவர் பேசப் பேச எங்களுடைய உறுப்பினர்களின் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் நாங்கள் தொடர்ந்து முழக்கமிட்டோம்.
முதலமைச்சர் பேசி முடித்த உடனே, எங்களுக்கு வாய்ப்புத் தருவதாகச் சொன்னார் சபாநாயகர். ``எதிர்க்கட்சித் தலைவராக உங்களுக்கு நான் வாய்ப்புத் தருகிறேன்’’ என்று கூறினார். நான் சொன்னேன், ``ஆமாம், நாங்கள் பதில் சொல்லி ஆகவேண்டும், எங்கள் மீது குற்றச்சாட்டு வைத்திருக்கிறார், பொய்க் குற்றச்சாட்டுகளைச் சொல்கிறார்’’ என்று சொன்னோம்.
ஒருதலைப்பட்சமான நடவடிக்கை
`வாய்ப்புத் தருகிறேன்’ என்று சொன்ன சபாநாயகர் இரண்டாவது நிமிடத்திலேயே மாற்றிவிட்டார். அதாவது அவருக்கு ஏதோ ஒரு குறிப்பு வந்தது; வந்த உடனே பார்த்துவிட்டு, ``இல்லை இல்லை, உங்களுக்கு நான் வாய்ப்பு கொடுக்க முடியாது’’ என்று சொல்லிவிட்டார். அப்போது நாங்கள் எங்கே சென்று இந்த பொய்க் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்வது? அதனால்தான் பத்திரிகையாளர்களைச் சந்தித்திருக்கிறேன். சபாநாயகருடைய ஒருதலைப்பட்சமான நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கின்றோம்.
இன்றைக்குப் பார்த்தீர்கள் என்றால், முதலமைச்சர் பேசும்போது அவர் எங்கள் பக்கம் திரும்பக் கூட இல்லை. நான், துணைத் தலைவர், கொறடா அனைவரும் குரல் கொடுத்தோம். ``எங்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடுங்கள், முதலமைச்சர் பேசி முடித்ததற்கு பிறகாவது, வாய்ப்புக் கொடுக்கிறேன் என்று சொல்லுங்கள்’’ என்று கேட்டோம். ஆனால், அவர் எங்கள் பக்கமே திரும்பவே இல்லை. ஒரு பக்கமாகவே பார்த்துக்கொண்டிருந்தார். முழுக்க முழுக்க இந்த அரசுக்கும் முதலமைச்சருடைய பேச்சுக்கும் ஜால்ரா அடித்துக்கொண்டே இருந்தார். எனவே அவற்றையும் கண்டித்து, நாங்கள் இன்றைக்கு வெளிநடப்பு செய்திருக்கிறோம்.
கேள்வி : பா.ஜ.க. பற்றி நீங்கள் கடந்த வியாழக்கிழமை பேசியிருந்தீர்கள். பா.ஜ.க. பற்றி முதலமைச்சர் எதுவுமே பேசவில்லையே ஏன்?
பதில் : அவர்கள் பா.ஜ.க. இல்லை. அமீத் ஷா கூடத் தேவையில்லை, ‘பா’ கூட வராது. இன்னும் சொல்லப்போனால், ஒரு அமைச்சர் பா.ஜ.க.-வைக் கண்டித்து, பா.ஜ.க தலைவர்களைக் கண்டித்து, அவையில் பேசுகிறார். அதை இன்னொரு அமைச்சர் எழுந்து, ``அவற்றை அவைக்குறிப்பிலிருந்து நீக்குங்கள்’’ என்கிறார். அந்த அளவுக்குத்தான் இந்த அரசு இருக்கிறது. தைரியமற்ற, வக்கற்ற அரசு. ஒரு `டம்மி முதலமைச்சர்’தான் இப்போது உட்கார்ந்திருக்கிறார். யார் யார் வசனம் எழுதுபவர்கள் எழுதித் தருகிறார்களோ, அதை நன்றாகப் படித்துவிட்டு, மூன்று நாளில் நன்றாக ஆயத்தமாகி வந்திருக்கிறார். அதை இன்றைக்கு நேரம் கிடைத்த உடனே பேசிவிட்டார்.
எங்களோடு சேர்ந்து எங்களுடைய கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், மனிதநேய மக்கள் கட்சியினரும், மனிதநேய ஜனநாயகக் கட்சி ஆகிய இருவருமே சேர்ந்து வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.
கேள்வி : முதலமைச்சரிடம் நீங்கள் ஆதாரம் எடுத்துக்காட்டுங்கள் என்று கேட்டதற்கு, முதலமைச்சர் என்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று ஆதாரங்களை கையில் வைத்திருந்தாரே அதைபற்றி என்ன சொல்ல வருகிறீர்கள்?
பதில் : அதெல்லாம் ஆதாரம் கிடையாது. அவை வெறும் குற்றச்சாட்டுகள்தான். இந்த மாதிரி எல்லா ஆதாரமும் எங்களிடம் இருக்கின்றன. இதைத்தான் நாங்களும் சொல்கிறோம். அமலாக்கத்துறை வழக்கின் குற்றச்சாட்டைக் கூறுகிறாரே, இதேபோன்று பொதுப்பணித்துறை அமைச்சர் மீதும் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. முதலமைச்சர் மீதே குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. சி.பி.ஐ. குற்றச்சாட்டுகள் எல்லாம் ஆதாரம் கிடையாது, அதை நிரூபிக்க வேண்டும்.
கேள்வி : முதலமைச்சர் பேசுவது மக்களுக்குச் சென்றடையக்கூடாது என்பதற்காகத்தான் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகிறீர்கள் என்று சபாநாயகர் குற்றச்சாட்டு வைக்கிறாரே?
பதில் : நாங்கள் பதிலுரை முடிந்துதான் கேட்டோம். முதலில் சபாநாயகர் அனுமதிப்பதாகக் கூறினார். அதன் பிறகு என்ன நிர்பந்தமோ தெரியவில்லை, `அனுமதிக்க முடியாது’ என்றார். அதனால்தான் பத்திரிகையாளர்களாகிய உங்களை சந்திக்க வந்துள்ளோம்.
கேள்வி : முதலமைச்சர் ரத்தீஷ் யார் என்று கேட்கிறாரே?
பதில் : ஆதாரம் இருக்கிறதா?
கேள்வி : நூலகத்தில் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.
பதில் : வாருங்கள், இரண்டு பேரும் நூலகத்திற்குப் போவோம். நூலகத்தைப் பற்றியெல்லாம், இப்போது இருக்கக்கூடிய முதலமைச்சர் பேசலாமா?பிறகு பெண்களைத் தவறாகப் பேசினோம் என்கிறார். இரட்டை அர்த்தத்தில் பேசக்கூடாது, மூன்று அர்த்தத்தில் பேசக்கூடாது என்கிறார். இவற்றையெல்லாம் இந்த முதலமைச்சருக்குச் சொல்வதற்கு எந்தத் தகுதியும் கிடையாது. இவர் நடித்த படங்கள் என்ன? நடித்த காட்சிகள் என்ன? பாடிய பாடல்கள் என்ன? இதையெல்லாம் இப்போது பேசினால் அவரால் தாங்க முடியாது. உங்களுடைய நண்பர் விஷ்ணு ரெட்டி என்ன பொறுப்பில் இருக்கிறார்? சுஜய் ரெட்டி என்ன பொறுப்பில் இருக்கிறார்? அனில் ரெட்டி என்ன பொறுப்பில் இருக்கிறார்? ஏன் இப்போது வரக்கூடிய எல்லா சுரங்கங்கள், எல்லா பொறுப்புகளையும் அவர்களிடம் ஒப்படைத்திருக்கிறீர்கள்? அதற்கான ஆதாரத்தை நாங்கள் வெளியிடுவோம்.
இவ்வாறு மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசினார்.